சிறுபட்ஜெட் படங்களுக்காக அரசு தியேட்டர்கள்

|

Govt cinema theatres for low budget film

கேரளாவில் மம்மூட்டி, மோகன்லால், திலீப் நடிக்கும் படங்கள் மட்டுமே பெரிய பட்ஜெட் படங்கள். அதுவே அதிக பட்சம் 5 கோடிதான். மற்ற படங்கள் ஒன்று முதல் இரண்டு கோடிக்குள் தயாராகும். இந்த படங்களை காப்பாற்ற கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக,  திருவனந்தபுரத்தில் கலாபவன், கைரளி, ஸ்ரீ ஆகிய தியேட்டர்களை நடத்தி வரும் அரசு, நாட்டின் பல பகுதிகளில் தியேட்டர்களை கட்ட திட்டமிட்டுள்ளது. இதற்காக, கேரள நிதி கழகம் பல கோடி ரூபாய்களை ஒதுக்கி உள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் வெளியாகும் படங்களில் 90 சதவிகித படங்கள் சிறுபட்ஜெட் படங்கள். அவை ஒரு சதவிகிதம் கூட லாபம் கிடைப்பதில்லை. சில படங்கள் மட்டுமே லாபம் சம்பாதிக்கின்றன.
டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக சிறுபட்ஜெட் படங்களின் எண்ணிக்கை பெருகி உள்ளது. வாரத்துக்கு 10 படங்களுக்கு பூஜை போடப்படுகிறது. 5 படங்கள் வரை வெளிவருகிறது. இவை மக்களை சிறிய அளவில்கூட சென்று சேராமல் தியேட்டருக்கு போன வேகத்திலேயே திரும்பி வருகிறது. இந் நிலையில் சிறுபட்ஜெட் படங்களை காப்பாற்ற வேண்டிய நிலை தமிழ்நாட்டில்தான் அதிகம். அதனால் கேரளாவை பின்பற்றி தமிழக அரசும், நாடு முழுவதும் தியேட்டர் கட்ட வேண்டும் என்றும் அதில் குறைந்த கட்டணத்தில் படங்களை திரையிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அரசே தியேட்டர் கட்டுவது என்பது புதிதல்ல, ஏற்கெனவே வேலூரில் அண்ணா கலையரங்க தியேட்டரை, செய்தி மக்கள் தொடர்பு துறை நடத்தி வருகிறது. திருச்சியில் கலையரங்க தியேட்டரை அரசு வருஷம்தோறும் லீசுக்கு விடுகிறது.

'அரசே தியேட்டர் கட்டினால் அது சிறு பட்ஜெட் படங்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். இதற்கு பெரிய முதலீடு தேவையிருக்காது. ஒவ்வொரு பஸ் நிலையத்தின் மேல் தளமும் காலியாக இருக்கிறது. அதில் 100 பேர், 200 பேர் பார்க்கும் வகையிலான மினி தியேட்டர்களை கட்டலாம். அதன் பராமரிப்பு செலவு, ஊழியர்கள் சம்பளம் இதை மட்டும் கருத்தில் கொண்டு கட்டணங்களை நிர்ணயித்து படங்களை காட்டலாம்' என்கிறார் தயாரிப்பாளர் சங்கப் பொதுசெயலாளர் பி.எல்.தேனப்பன்.

'இந்த கருத்தை பல வருடங்களாக வினியோகஸ்தர் சங்கம் வற்புறுத்தி வருகிறது. மல்டிபிளக்ஸ் தியேட்டரில் வசூலிக்கப்பட்டும் கட்டணத்தால் சாதாரண மக்கள் தியேட்டருக்கு வருவதில்லை. அவர்களை வரவழைக்க அரசே தியேட்டர் கட்ட வேண்டும். தியேட்டர் கட்ட முடியாத இடங்களில் ஹோம் தியேட்டர்களை அனுமதிக்கலாம். இதன் மூலம் சுயதொழில் பெருகும்' என்கிறார் வினியோகஸ்தர் சங்க செயலாளர் கலைப்புலி ஜி.சேகரன்.

அதிகமான சிறுபட்ஜெட் படங்களை இயக்கியுள்ள டி.பி.கஜேந்திரன் கூறும்போது, 'அரசே தியேட்டர் கட்டும் யோசனை வரவேற்கத்தக்கது. மாதத்துக்கு 20 சிறுபட்ஜெட் படங்கள் வந்தாலும் எதுவும் லாபம் தருவதில்லை. ஆனால் அவற்றிலும் சிறந்த படங்கள் இருந்து, அது கவனிக்கப்படாமல் போகிறது. அரசு தியேட்டர் வந்தால் மினிமம் கியாரண்டி கிடைக்கும். அதனால் நல்ல படைப்பாளிகள் வருவார்கள். இதை தவிர சினிமாவை காப்பாற்ற வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை' என்றார்.
 

Post a Comment