எனக்கு மூன்று வேளை உணவு கிடைத்தால் நான் சந்தோசப்படுவேன். ஏனெனில் இளவயதில் பசியோடு படுத்த நாட்கள் அதிகம் என்று கூறி மகிழ்ச்சி என்றால் என்ன என்பதை விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் பதிவு செய்தார் இளைஞர் ஒருவர்.
வீடு கட்டினால் சந்தோசம், கார் வாங்குவது, நகை போட்டுக்கொள்வது, பட்டதாரி ஆவது, பக்கத்து வீட்டுக்காரரை விட அதிகமாக பணம் வைத்திருப்பது என சந்தேசம் பற்றி பல வரையரைகளை கூறினார்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள். ஆனால் பசியற்று இருப்பதுதான் என்னுடைய மகிழ்ச்சி என்றார் இளைஞர் ஒருவர். பசியின் கொடுமையை பல நூறு ஆண்டுகளுக்கு கொடிது கொடிது வறுமை கொடிது என்று பாடியுள்ளார் ஔவையார்.
அதேபோல் நடுத்தர வயதைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் வலியற்ற ஆரோக்கியமான வாழ்க்கைதான் எனக்கு மகிழ்ச்சி என்றார். இன்றைக்கு பெரும்பாலான மனிதர்கள் ஏதாவது ஒரு நோயுடனோ, அந்த நோய் ஏற்படுத்தும் வலியுடனோ வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதனால்தான் வலியற்ற வாழ்க்கை தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் அந்த பெண்மணி.
நிகழ்ச்சியில் எழுத்தாளர் மனுஷ்ய புத்ரன், சிந்தனையாளர் டாக்டர் மோகன், எழுத்தாளர், சமூக பார்வையாளர் பாதர் ஜெகத் கஸ்பார் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
இன்றைய கால கட்டத்தில் எதையாவது ஒன்றை அடைவதுதான் சந்தோசம் என்கின்றனர். அதற்காக அவர்கள் இழப்பதை மறந்து விடுகின்றனர். ஆனால் நான் நம்பும் விசயத்தை மட்டும் செய்கிறேன் அதுதான் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் மனுஷ்ய புத்ரன்.
இன்றைக்கு மகிழ்ச்சி என்பது வெளியே இருந்து திணிக்கப்படுகிறது என்றார் மனுஷ்ய புத்ரன். நாம் வெளிப்படையாக இருந்தால் மகிழ்ச்சியை நேருக்கு நேராக சந்திக்கலாம் என்றார். நாம் அடைபட்டுப் போயிருப்பதால்தான் சந்தோசம் நமக்கு கிடைப்பதில்லை என்றும் கூறினார்.
மகிழ்ச்சி என்றால் என்ன என்று பேசிய ஜெகத் கஸ்பார், நம்முடைய மகிழ்ச்சியை நாம்தான் தீர்மானிக்கவேண்டும் என்றார். புற பொருட்களின் வன்முறையில் இருந்து கிடைக்கும் விடுதலை கூட சிலருக்கு மகிழ்ச்சியைத் தரும் என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய மற்றொரு சிறப்பு அழைப்பாளர் டாக்டர் மோகன், மகிழ்ச்சி என்பது பகிர்ந்து கொள்வது என்றார். இந்தியாவைப் பொருத்தவரை அமெரிக்காவைப் போல, ஜப்பானைப் போல வல்லரசாகவேண்டும் என்பார்கள். ஆனால் உலக அளவில் அதிகம் தற்கொலைகள் நிகழ்வது ஜப்பானில்தான் என்றார். காரணம் அவர்கள் மகிழ்ச்சியுடன் இல்லை. பணமும், பொருளாதார வல்லமை மட்டும் மகிழ்ச்சியல்ல உலகில் உள்ள மிகச்சிறிய நாடான அதுவும் இந்தியாவிற்கு அருகில் உள்ள பூடான் நாட்டு மக்கள்தான் உலக அளவில் மகிழ்ச்சிகரமாக இருக்கின்றனர் என்று டாக்டர் மோகன் கூறினார். ஆனால் அதை யாரும் ஒத்துக்கொள்வதில்லை. மகிழ்ச்சி என்பது வேறு எங்கும் இல்லை. அது நமக்குள்தான் இருக்கிறது. பகிர்ந்து கொள்வதை கற்றுக்கொடுத்தால் அதுதான் உண்மையான மகிழ்ச்சி என்றார்.
ஆயிரம் ஆசைகள் இருக்கலாம் பசியோடு இருப்பவனுக்கு உணவு கிடைப்பதுதான் மகிழ்ச்சி. வலியற்ற ஆரோக்கியமான வாழ்க்கை அதுதான் மகிழ்ச்சி. எனவே சந்தோசத்தை வெளியே தேடாதீர்கள் அது உள்ளே இருக்கிறது. அதை பகிர்ந்து கொடுங்கள்
உணர்வுகளை, வருத்தங்களை, இருப்பதை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று கூறி முடித்தார் கோபிநாத்
Post a Comment