ஒரே நாளில் நடக்கும் கதையில் நடிக்கிறார் 'பூ பட நாயகி பார்வதி. மலையாளத்தில் 'டிராபிக் என்ற பெயரில் வந்த படம் தமிழில் 'சென்னையில் ஒரு நாள் என்ற பெயரில் தயாராகிறது. இது பற்றி இயக்குனர் ஷஹீத் காதர் கூறியதாவது: மனிதர்கள் தங்கள் வாழ்வில் தங்களுக்கே தெரியாமல் சில நேரம் தவறுகள் செய்வதுண்டு. அதை எண்ணி வருந்துபவர்களுக்கு மறுபடியும் அதை திருத்திக்கொள்ள இரண்டாவது வாய்ப்பு கிடைக்கும் அந்த வாய்ப்பை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்து அதன் முடிவு அமையும். இப்படியொரு கதை அமைப்புடன் உருவாகிறது சென்னையில் ஒரு நாள். இதயம் உள்பட உடல் உறுப்புகளை தானம் செய்யும் ஒருவரின் கதை. நிஜத்தில் நடந்த ஒரு சம்பவமே இப்படம். சரத்குமார், பிரகாஷ்ராஜ், ராதிகா, சேரன், பிரசன்னா, பார்வதி, மல்லிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். மூளை செயலிழந்த ஒருவரின் இதயத்தை மற்றொருவருக்கு பொருத்துவதற்காக டிராபிக் நிறைந்த சாலையில் 11 நிமிடத்துக்குள் கொண்டு செல்ல வேண்டும். அது சாத்தியமாகிறதா என்பதை பரபரப்பாக காட்சிகள் உணர்த்தும். இதில் நடித்திருக்கும் அனைவருமே மலையாளத்தில் இப்படத்தை பார்த்து தங்களுக்கு இப்படியொரு கதாபாத்திரம் கிடைக்காதா என்று எண்ணியவர்கள். அந்த உணர்வு ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் பிரதிபலித்திருக்கிறது. ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் தயாரித்திருக்கின்றனர். இவ்வாறு ஷஹீத் காதர் கூறினார்.
Post a Comment