ஜீ தமிழ் டிவியின் திகிலூட்டும் பியர் பைல்ஸ்

|

Fear Files On Zee Tamil Tv

மனிதர்களாக பிறந்த எல்லோருமே ஏதாவது ஒரு விசயத்திற்கு பயப்படுவார்கள். சினிமாவிலோ, தொலைக்காட்சியிலோ திகிலான சம்பவங்களை பார்ப்பது அநேகம் பேருக்கு சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் அதேபோன்ற அசாதாரணமான சம்பவங்கள் நிகழும் போது அச்சம் அதிகரிக்கும். இதுபோன்ற அசாதாரணமான சம்பவங்களை பதிவு செய்வதுதான் ‘பியர் பைல்ஸ்' (Fear Files). ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு மாதிரியான திகிலான சம்பவங்கள் இடம் பெறுகின்றன.

பியர் பைல்ஸ் திகில் தொடரின் முதல் கதையாக மும்பையில் வசிக்கும் கர்ப்பிணி பெண் நீருவின் திகில் கதை ஒளிபரப்பானது. ஆரம்பமே அமானுஷ்யமாக தொடங்குகிறது. மிகபெரிய வீட்டில் கர்ப்பிணிப் பெண் ஒருத்தி தனியாக உறங்கிக் கொண்டிருக்கிறாள். அவளுடைய வயிற்றினை அமானுஷ்யமான உருவம் ஒன்று தொட்டுத் தடவுகிறது. இதைக்கண்டு திடுக்கிட்டு விழிக்கும் அந்த பெண்ணின் கண் முன்னாள் கருப்பு உருவம் ஒன்று அமர்ந்திருக்கிறது. இதைக் கண்டு அலறுகிறாள் அவள். இதற்கான காரணம் என்ன என்பதை விவரிக்கிறது கதை.

நீரு தன் கணவனுடன் புது வீட்டுக்கு குடி போக, அங்கு வழக்கத்திற்கு மாறான சம்பவங்கள் நடக்கின்றன. திடீரென்று தொலை பேசி மணி ஒலிக்கிறது. வீட்டின் மாடியில் ஏதோ ஒரு உருவம் நடந்து செல்கிறது. இது போன்ற சம்பவங்களினால் நீரு அதிர்ச்சியும் பயமும் கொள்கிறாள்.

அந்த வீட்டில் இவர்கள் குடி வரும் முன்பு அங்கு ஒரு கர்ப்பிணி பெண் தற்கொலை செய்த உண்மை இவளுக்கு தெரிய வருகிறது. அந்த ஆவிதான் இவளை பல ரூபங்களில் பயமுறுத்துகிறது. இந்த ஆபத்திலிருந்து நீரு தன் வயிற்றில் இருக்கும் எப்படி காப்பாற்றினாள் என்பதை திகிலான சம்பவங்களுடன் பதிவு செய்துள்ளனர்.

ஆவிகளின் கோர தாண்டவமும், அதன் பயங்கர பிடியில் சிக்கி உயிருக்கு போராடியவர்களின் உண்மை சம்பவங்களும் வாரவாரம் திகில் காட்சிகளுடன் ஒளிபரப்பாகின்றன.ஆவிகள், பேய், பூதம் பற்றிய நம்பிக்கைகள் பலருக்கு இருப்பதில்லை. இருப்பினும் இதய பலவீனம் உள்ளவர்கள் மற்றும் குழந்தைகள் இத்தொடரை பார்ப்பதை தவிர்ப்பது நல்லது என மனநல மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் அதை எல்லாம் யார் கேட்பது ‘பியர் பைல்ஸ்' போன்ற திகில்கதைகள் குழந்தைகள்தான் அதிகம் பார்க்கின்றனர் என்பதுதான் உண்மை. அவர்களுக்குத்தான் இதுபோன்ற கதைகள் சுவாரஸ்யமாக இருக்கின்றன. ஜீ தமிழில் ஞாயிறு தோறும் இரவு 10 மணிக்கு இந்த திகில் தொடர் ஒளிபரப்பாகிறது.

 

Post a Comment