சம்பளப் பாக்கியை கொடுக்காமல் திருத்தணியை ரிலீஸ் செய்யக் கூடாது.. ராஜ்கிரண் வழக்கு

|

Rajkiran Sues Thiruthani Producer

சென்னை: எனது சம்பளப் பணத்தைக் கொடுக்காமல், திருத்தணி படத்தை வெளியிடக் கூடாது என்று கோரி நடிகர் ராஜ்கிரண் சென்னை கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர் சிட்டி சிவில் கோர்ட்டில் போட்டுள்ள வழக்கில் கூறியுள்ளதாவது:

நடிகர் பரத் நடிப்பில் திருத்தணி என்ற படத்தை வி.கே.மீடியா தயாரித்துள்ளது. அதனை டி.என்.எல்.சினி ஸ்கிரீன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதில் நடிப்பதற்கு தயாரிப்பாளரிடம் இருந்து அழைப்பு வந்தபோது ரூ.80 லட்சம் சம்பளம் கேட்டேன். இறுதியில் ரூ.60 லட்சம் தர ஒப்புக்கொண்டனர். ரூ.36 லட்சம் கொடுக்கப்பட்டு விட்டது.

படப்பிடிப்பு முடிவை நெருங்கும் நிலையில் பாக்கி சம்பளம் ரூ.24 லட்சத்தை கேட்டேன். தரவில்லை என்பதால் டப்பிங் பேச மறுத்துவிட்டேன். பின்னர் சம்பந்தப்பட்ட சங்கங்களில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, டப்பிங் பேசுவதற்கு முன்பு இரண்டு தவணைகளில் ரூ.5 லட்சமும், படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு ரூ.14 லட்சமும் தர உறுதி அளித்தனர்.

எனவே பாக்கியிருந்த ஒரு நாள் சூட்டிங்கை முடித்தேன். அதோடு சூட்டிங் முடிந்தது. ஆனால் பாக்கி சம்பளத்தை தரவில்லை. எனது குரலைத்தான் பதிவு செய்ய வேண்டும். ஆனால் எனக்கு பதிலாக மற்றொருவரின் டப்பிங் குரல் பதிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து சிவில் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தேன். அது நிலுவையில் உள்ளது.

தற்போது படம் விரைவில் வெளியாக இருப்பதாக செய்திகள் வருகின்றன. படம் ரிலீஸ் ஆனால் எனக்கு நஷ்டம் ஏற்படும். எனவே திருத்தணி படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

 

Post a Comment