கலைஞர் தொலைக்காட்சியில் ‘சூர்யபுத்ரி' கேப்டன் டிவியில் ‘மனம் விட்டுப் பேசலாம்' என பிஸியாக இருக்கிறார் நடிகை குட்டிபத்மினி. நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்து சின்னத்திரையில் பல ஆண்டுகளாக பல்வேறு சீரியல்களை தயாரித்து கொண்டிருக்கிறார். தன்னுடைய அனுபவங்களை அவர் நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.
கலைஞர் டிவியைப் பொருத்தவரை, குஷ்பு, பாலசந்தர், திருச்செல்வம், ஏவிஎம் இவர்களுக்கு மத்தியில் குட்டி பத்மினி குட்டியாக மாட்டிக்கொண்டு போட்டி போடுகிறேன். அவர்களும் இவள் என்ன செய்யப்போகிறாள் என்று பார்க்கிறார்கள். நம்மை அங்கு நிரூபிக்கணும். நல்ல பேர் வாங்கணும். எல்லா தரப்பு மக்களையும் பார்க்க வைக்கணும்.
சூர்யபுத்ரி சீரியல் 100 எபிசோடுகளைத்தாண்டி நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. டாப் டென் சீரியலில் நாங்க இருக்கோம். எல்லா டிவி சீரியலிலும் குடும்பத்தைப் பிரிக்கும் விஷயங்கள்தான் மேலோங்கி இருக்கும். இதுல குடும்பத்தை ஒன்றாக சேர்ப்பதற்காக பாடுபடும் கேரக்டர்கள்தான் அதிகம். நிழல்கள் ரவி, சுதா சந்திரன், பிரகதி, லாவண்யா என்று இதில் நடித்திருப்பவர்கள் எல்லோருமே சினிமா நடிகர்கள். அதனால் நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கு.
இந்த தொடரில் பணக்கார வீட்டுப்பெண் கதாபாத்திரத்திற்கு என் மூத்த மகள் கீர்த்தனாதான் சரியாக இருப்பாள் என்று கெஞ்சிக்கேட்டு நடிக்க வைத்திருக்கிறேன். ஏற்கெனவே "அபிராமி' என்ற தொடரில் சிறப்பாக நடித்தமைக்காக அவளுக்கு "பெஸ்ட் சைல்டு ஆர்டிஸ்ட்' விருது கிடைத்திருக்கிறது. என் மூன்று மகள்களுமே என் தொடர்களில் நடித்திருக்கிறார்கள். நன்றாகவும் படிக்கிறார்கள்.
நாங்கள் எடுத்த தொடர்களில் "உறவுகள்', "கிருஷ்ணதாசி', "மந்திரவாசல், "போலீஸ் டைரி', "எப்.ஐ.ஆர்', "கனாக் கண்டேன் தோழி', "கலசம்', இப்போது "சூர்ய புத்ரி' - ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் தனித்தன்மை மிக்க தொடர்கள். டிவி தொடர் தயாரிப்பதில் போட்டியிருந்தால்தான் ஆரோக்கியமான சூழல் நிலவும். நான் நாள் முழுக்க உழைத்தாலும், அன்றிரவு அன்றைய நாளின் தொடர்கள் அனைத்தையும் பதிந்து வைத்து பார்த்துவிடுவேன். தமிழ் மட்டுமல்ல, ஹிந்தி, மலையாளம், மராத்தி, பெங்காலி என்று அனைத்தையும் பார்ப்பேன். நிறைய படிப்பேன். மற்ற தொடர்களில் ஏதாவது புதுமை இருந்தால், அதை நம்மால் ஏன் பண்ணமுடியாது.. என்று முயற்சி செய்வேன். அதனால்தான் 30 ஆண்டுகளாக சின்னத்திரை உலகில் நிலைத்திருக்க முடிகிறது என்று கூறிவிட்டு சூட்டிங்கிற்கு தயாரானார் குட்டிபத்மினி.
சீரியல் தயாரிப்பு தவிர குட்டிபத்மினிக்கு அமீர்கானின்"சத்யமேவ ஜெயதே' போல நிகழ்ச்சிகள் பண்ண வேண்டும் என்ற ஆசை இருக்கிறதாம். இது தவிர அறியாமை, மூட நம்பிக்கை, போலிச் சாமியார்களிடம் ஏமாறுதல் போன்றவற்றை மாற்றும் நிகழ்ச்சிகள் செய்யவேண்டும் என்றும் கூறியுள்ளார். சமூகசேவையில் ஆர்வம் உள்ள குட்டி பத்மினி காஞ்சிபுரம் அருகில் "மித்ராலயா' என்ற ஆதரவற்ற முதியோர்களுக்கான இல்லத்தை நடத்தி வருகிறார். குறைந்த பட்சம் 500 முதியோர்களையாவது பராமரிக்கவேண்டும் என்பதுதான் குட்டிபத்மினியின் லட்சியமாம்.
Post a Comment