டொரன்டோ: கனடா தலைநகர் டொரன்டோவில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் மற்றும் இலங்கைத் தமிழர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வரும் நவம்பர் 3-ம் தேதி டொரன்டோவில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார் இளையராஜா. ஆனால் இந்த மாதம் முழுவதும் இலங்கைத் தமிழர்கள் துக்க மாதமாக அனுஷ்டிப்பதால், அந்தத் தேதியில் இசை நிகழ்ச்சி நடத்தக் கூடாது என இலங்கைத் தமிழர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே இந்த நிகழ்ச்சி பற்றி அதிகாரபூர்வமாக பத்திரிகையாளர்களிடம் அறிவிப்பதற்காக இளையராஜா கனடா சென்றார். டொரான்டோ நகரில் பத்திரிகையாளர்களை அவர் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இளையராஜா வெள்ளிக்கிழமை பகல் 11 மணிக்கு அங்கு சென்றபோது இலங்கை தமிழர்களும் சீமானின் நாம் தமிழர் கட்சியினரும் நூற்றுக்கணக்கில் திரண்டு இளையராஜாவை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.
நவம்பர் மாதத்தில் விடுதலைப்புலிகளின் மாவீரர் தினம் கடை பிடிக்கப்படுகிறது. அந்த மாதம் முழுவதும் மகிழச்சியான நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்படுவது இல்லை. எனவே இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விழாக் குழுவினர் இளையராஜாவை பாதுகாப்பாக அழைத்து சென்று ஹாலுக்குள் தங்க வைத்தனர். நீண்ட நேரம் தமிழர்கள் அங்கு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்த நிகழ்ச்சி மூலம் திரளும் பணத்தில் ஒரு பகுதியை ஈழத் தமிழர் மறுவாழ்வுக்காக தரத் திட்டமிட்டிருந்தார் இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment