நீலம் சஞ்சீவ ரெட்டி.. ஆந்திராவின் 'டான்'!!!

|

Sollunganne Sollunga

சென்னை: சன் டிவியின் சொல்லுங்கண்ணே சொல்லுங்க செம கலக்கு கலக்கி வருகிறது. இன்று காலை ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கல்லூரிப் பிள்ளைகள் உதிர்த்த முத்துக்களைப் பார்த்தபோது உடம்பெல்லாம் புல்லரித்து செல்லரித்துப் போய் விட்டது போங்க.

இமான் அண்ணாச்சி நடத்தி வழங்கும் இந்த காமெடி களேபர கலாட்டா மற்றும் பொது அறிவு நிகழ்ச்சிக்கு மக்களிடையே செம கிரேஸ். கல்லூரி மாணவர்கள், மாணவியர்கள், பள்ளிச்சிறார்கள், பொதுமக்கள் என யாரையும் விடாமல் தனது கேள்விகளால் கலாய்த்து வரும் இமானிடம் இன்று சிக்கியவர்கள் சென்னை சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி கல்லூரியைச் சேர்ந்த மாணவியர்.

இமான் கேட்ட கேள்விகளுக்கு மாணவியர் அளித்த பதில்கள் இருக்கே... அடேங்கப்பா.. விக்கித்துப் போய் விட்டோம் போங்க..

இமான் கேட்ட ஒரு கேள்வி, நீலம் சஞ்சீவ ரெட்டி யார் என்பது. அதற்கு ஒவ்வொருவரும் குண்டக்க மண்டக்க பதிலளித்தனர். ஒரு மாணவி அவரை ரிசர்வ் வங்கி கவர்னர் என்றார், இன்னொருவரோ பாகிஸ்தான் ஜனாதிபதி என்று கூறி பயமுறுத்தினார்.

இன்னொருவரோ முதல் விமானி என்று கூறினார். அடுத்த மாணவி கூறியதுதான் பயங்கரமானது.. அதாவது ஆந்திராவின் டான் என்று அந்த மாணவி கூறியபோது கேள்வியைக் கேட்ட இமானே ஸ்டன் ஆகி விட்டார்.

கடைசியாக ஒரு மாணவி மிகச் சரியாக அவர் முன்னாள் ஜனாதிபதி அதுவும் 9வது ஜனாதிபதி என்று கூறி கல்லூரியின் மானத்தைக் காப்பாற்றினார்.

அதேபோல நாயை விட அதிக மோப்ப சக்தி கொண்ட விலங்கு எது என்ற கேள்விக்கு ஏகப்பட்ட பதில்கள்.. ஆனால் இன்னொரு நாய் என்று ஒரு மாணவி கூறியதுதான் செம ஹைலைட்...

முடிலயடா சாமி....!

 

Post a Comment