கலைஞர் தொலைக்காட்சியில் இருந்து புதிதாக தொடங்கப்பட்ட முரசு டிவிக்கும் சன் குழுமத்தின் சன் லைப் தொலைக்காட்சிக்கும் இடையேயான போட்டி அதிகரித்துள்ளது. இரண்டு தொலைக்காட்சிகளிலும் பழைய திரைப்படங்கள், பாடல்கள் போன்றவைகளை தொகுப்பாளர்களின் தொந்தரவு இல்லாமல் ஒளிபரப்புவதே ரசிகர்களை அதிக அளவில் ஈர்த்துள்ளது என்று கூறப்படுகிறது.
இசை சேனலோ, நகைச்சுவை சேனலோ யாராவது ஒரு தொகுப்பாளினி பேசி போரடித்துக்கொண்டிருப்பார். சில சமயம் இதுவே நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஆனால் ஜெயாடிவியின் மேக்ஸ், மூவி சேனல்களில் இதுபோன்ற நிகழ்ச்சித் தொகுப்பாளர்களின் தொந்தரவு இருக்காது. இருந்தாலும் நேயர்களிடையே இந்த தொலைக்காட்சிகளுக்கு வரவேற்பு குறைவாகவே இருந்தது.
இதனிடைய பழைய பாடல்கள், பழைய திரைப்படங்களை ஒளிபரப்புவதற்காக சமீபத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் இருந்து முரசு சேனல் தொடங்கப்பட்டது. இந்த சேனலில் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள் தாத்தா, பாட்டி காலத்தவை என்றாலும் இன்றைக்கு வீட்டில் உள்ள தாத்தா, பாட்டிகளுக்கு அவை நல்ல பொழுது போக்காக இருக்கின்றனவாம்.
அதேபோல் முரசுக்கு போட்டியாக உள்ள சன் லைப் டிவியில் 80, 90களில் வெளிவந்த திரைப்படங்கள், பாடங்கள் ஒளிபரப்புகின்றனர். இது இன்றைய நடுத்தரவயதினரை கவர்ந்துள்ளது. சன் லைப் தொலைக்காட்சியிலும் தாத்தா, பாட்டிகளை கவரும் வகையில் அவ்வப்போது பழைய திரைப்படங்களை ஒளிபரப்புகின்றனர். சீரியல்களைப் பார்த்து அலுத்துப் போன ரசிகர்களுக்கு இந்த தொலைக்காட்சிகளில் புத்துணர்வு கிடைக்கிறதாம். சபாஷ் சரியான போட்டி என்கின்றனர் பழைய சினிமாவையும், பாடல்களையும் விரும்பும் ரசிகர்கள்.
Post a Comment