நம்பிக்கையில்லா தீர்மானம்: பெட்டிக்கு சீல் வைப்பு

|

No-confidence motion: Seal deposit box

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க சிறப்பு பொதுக்குழு கூட்டம், நேற்று காலை சென்னை வடபழனி 100 அடி சாலையிலுள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. இரு அணியினருக்கும் இடையே கடும் வாக்குவாதமும், மோதலும் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் பதற்றம் ஏற்பட்டது. 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் கூட்டம் நடந்தது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக எஸ்.ஏ.சந்திரசேகரன் இருக்கிறார். அவரது தலைமையிலான அணி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, கேயார் தலைமையில் உருவான எதிரணியினர் முடிவு செய்தனர்.

 சங்கத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடத்த தடை கேட்டு, எஸ்.ஏ.சந்திரசேகரன் அணியினர் சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, தடை உத்தரவு பெற்றனர். அந்த தடையை விலக்க வேண்டும் என்று, கேயார் அணியை சேர்ந்தவர்கள் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து தடை விலக்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி இ.பத்மநாபன் மேற்பார்வையில், சிறப்பு பொதுக்குழு கூட்டலாம் என்று ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று காலை சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது.

இதில் தயாரிப்பாளர் சங்க துணை தலைவர்கள் சத்யஜோதி தியாகராஜன், டி.சிவா, செயலாளர்கள் கே.முரளிதரன், பி.எல்.தேனப்பன், பொருளாளர் கலைப்புலி எஸ்.தாணு, கேயார் மற்றும் அவரது அணியை சேர்ந்தவர்களுடன் சேர்த்து 300க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் அணியினர் மீது கேயார் அணியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இதை ஆதரித்தும், எதிர்த்தும் இருதரப்பினரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தயாரிப்பாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. கூட்டம் நடந்த அரங்கில் பத்திரிகை மற்றும் போட்டோகிராபர்கள், டி.வி கேமராக்கள் அனுமதிக்கப்படவில்லை.

  இதை எதிர்த்து பத்திரிகையாளர்கள் கோஷம் எழுப்பினர். அப்போது ஒருசில மீடியாக்களை மட்டும் உள்ளே அனுமதித்தனர். அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க அரங்கையும், ஓட்டலையும் சுற்றி 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.

தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக இல்லாதவர்களை உள்ளே அனுமதித்து, எஸ்.ஏ.சந்திரசேகரன் அணியினர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வாக்கெடுப்பு நடத்துவதாக குற்றம் சாட்டி, அவரது அணியை சேர்ந்தவர்கள் அரங்கை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

காலை 11 மணிக்கு தொடங்கி, மதியம் 1 மணி வரை நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையிலான அணி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து வாக்கெடுப்பு நடந்தது. உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து பெட்டியில் போட்டனர்.

'70 சதவீதம் போலி உறுப்பினர்கள்'

நிருபர்களிடம் கலைப்புலி எஸ்.தாணு பேசுகையில், 'இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 70 சதவீதம் பேருக்கு மேல் போலி உறுப்பினர்கள். 25 சதவீதம் பேர்தான் உண்மையான உறுப்பினர்கள். உடனே இதை நீதிபதியிடம் சொன்னோம்.  இந்த வாக்கெடுப்பு செல்லாது என்று சட்டப்படி கோர்ட்டில் வழக்கு தொடருவோம்' என்றார். அப்போது எஸ்.ஏ.சந்திரசேகரன் அணியை சேர்ந்தவர்கள், ஓட்டல் முன் நின்று, இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று கோஷம் எழுப்பினர்.

புதிய நிர்வாகிகள் தேர்தல்...

நிருபர்களிடம் பேசிய கேயார், 'கோர்ட்டில் முடிவு அறிவிக்கப்பட்டதும், இதுகுறித்து சங்க பதிவாளரிடம் முறைப்படி தகவல் தெரிவிக்கப்படும். பிறகு சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும்' என்றார்.

ரிசல்ட் எப்போது?

மேற்பார்வையிட்ட ஓய்வுபெற்ற நீதிபதி இ.பத்மநாபனிடம் நிருபர்கள் கேட்டபோது, '12.30 மணி நிலவரப்படி 200க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் வாக்களித்துள்ளனர். சீல் வைக்கப்பட்ட இந்த பெட்டி, நாளை சிட்டி சிவில் கோர்ட்டில் ஒப்படைக்கப்படும். விசாரணைக்குப் பிறகு இதன் முடிவு அறிவிக்கப்படும்' என்றார்.
 

Post a Comment