அழிந்துவரும் இனங்கள் பட்டியலில் தயாரிப்பாளர்

|

Producer in the list of Endangered Species

தமிழ் சினிமாவில் இயக்குனர்கள், படத் தயாரிப்பாளர்களாக மாறுவது புதிதில்லை. ஷங்கர், அமீர், லிங்குசாமி, சேரன், ஏ.ஆர்.முருகதாஸ், தங்கர்பச்சான், சசிகுமார் உட்பட பல இயக்குனர்கள் தயாரிப்பாளர்களாக உள்ளனர். இப்போது இந்த போக்கு அதிகரித்து வருகிறது. பிரபு சாலமன், 'மைனா' படத்தை தனது நண்பர் ஜான் மேக்ஸுடன் இணைந்து தயாரித்தார். இந்தப் படம் ஹிட்டானது. இதையடுத்து தன்னிடம் உதவி இயக்குனராக இருந்த அன்பழகன் இயக்கத்தில் 'சாட்டை' படத்தை தயாரித்தார். இதுவும் ஹிட்டானது. இயக்குனர் எழில் தனது நண்பர்களுடன் இணைந்து, 'மனம் கொத்திப் பறவை' படத்தை தயாரித்து இயக்கினார்.

அடுத்து, 'இது பூக்களின் தேசம்' என்ற படத்தை தயாரித்து இயக்குகிறார். பாண்டிராஜ், 'மெரினா' படத்தை தயாரித்து இயக்கினார். இந்தப் படம் ஹிட்டானதையடுத்து, 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' என்ற படத்தை மதனுடன் இணைந்து தயாரிக்கிறார். மேலும் இரண்டு படங்களைத் தயாரிக்க உள்ளார். இதே போல சுசீந்திரன், 'ஆதலால் காதல் செய்வீர்' படத்தை தயாரித்து இயக்கி உள்ளார்.  ஜெயம் ரவி, ஜீவா இணைந்து நடிக்கும் படத்தை ஜனநாதன் தயாரித்து இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. வெற்றிமாறன், 'தேசிய நெடுஞ்சாலை' படத்தை தயாரித்து வருகிறார். வெங்கட் பிரபு தனது தம்பி, பிரேம்ஜி அமரன் நடிக்கும் படத்தை தயாரிக்க உள்ளார். இயக்குனர் சற்குணம், 'மஞ்சள் பை' என்ற படத்தை தயாரிக்க இருப்பதாகக் கூறியுள்ளார். சுப்பரமணிய சிவா, 'உலோகம்' என்ற படத்தை நண்பர்களுடன் தயாரித்து இயக்குகிறார். மேலும் சீமான், செல்வராகவன், சிம்புதேவன், பாலாஜி சக்திவேல், வசந்தபாலன் போன்றோரும் படம் தயாரித்து இயக்க இருக்கின்றனர். இன்னும் பல இயக்குனர்களும் தயாரிப்பில் ஈடுபட உள்ளதாகக் கூறப்படுகிறது.

'மெரினா' பட ஹிட்டுக்குப் பிறகு பல இயக்குனர்களுக்கு படம் தயாரிப்பதில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. என்னிடம் சில இயக்குனர்கள் தயாரிப்பது பற்றி கேட்டார்கள். அவர்களுக்கு நம்பிக்கை அளித்தேன். இப்போது அவர்கள் படம் தயாரித்து வருகின்றனர்' என்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். 'சேட்டிலைட் உட்பட இன்றைய சினிமா பிசினஸ் கொஞ்சம் ஆரோக்கியமாக இருக்கிறது. சின்ன ஹீரோவை வைத்து மூன்று கோடியில் படம் எடுத்து, அதை அஞ்சு கோடிக்கு விற்க முடிகிறது. பெரிய ஹீரோவை வைத்து ஒரு வருடத்துக்கு மேல் உழைத்து படம் எடுத்து ஒன்றறை கோடி ரூபாயை இயக்குனர் ஒருவர் சம்பளமாக வாங்குவதை விட ஆறு மாதத்தில் இதை விட அதிகம் சம்பளம் பார்க்க முடியும்' என்கிறார் இயக்குனர் ஒருவர்.

'இயக்குனர்கள் தயாரிப்பாளர்களாக மாறுவது ஆரோக்கியமான விஷயம்தான்' என்கிறார் இயக்குனர் சங்கப் பொருளாளர் ஜனநாதன். அவர் மேலும் கூறும்போது, 'சினிமாவில் இரண்டு பேர் முக்கியம். ஒருவர் பணம் போடுபவர். இன்னொருவர் படம் எடுப்பவர். பணம் போட்டவருக்கு லாபம் வேண்டும். படம் எடுத்தவருக்கு வெற்றி வேண்டும். இதில் என்னவென்றால் பைனான்சியர் ஒருவர் தனக்குத் தெரிந்த தயாரிப்பாளருக்கு பணம் கொடுப்பார். அவர் மூலமாக, படம் இயக்குவார் இயக்குனர். காட்சி ஒன்றுக்கு அதிகப் பணம் செலவழித்தால் நன்றாக இருக்கும் என்பார் இயக்குனர். மறுப்பார் தயாரிப்பாளர். அதே போல வியாபாரத்துக்காக குத்துபாடல் வைக்கலாம் என்பார் தயாரிப்பாளர். இயக்குனர் வேண்டாம் என்பார். இருவருக்கும் கருத்து மோதல்கள் உருவாகும். மன வருத்தத்தோடுதான் படத்தை முடிப்பார்கள். அல்லது மனதை தேற்றிக்கொண்டு முடிப்பார்கள். இப்படித்தான் நடந்துவருகிறது. ஆனால், இப்போது பைனான்சியர்கள் தயாரிப்பாளர்களிடம் பணத்தை கொடுக்காமல் நேரடியாக படைப்பாளியிடம் கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள். அதனால்தான் ட்வென்டித் செஞ்சுரி பாக்ஸ் என்ற ஹாலிவுட் நிறுவனம் இயக்குனராக இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸுடன் ஒப்பந்தம் போடுகிறது. யுடிவி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் மிஷ்கின் போன்ற இயக்குனர்களுடன் ஒப்பந்தம் போடுகிறது' என்றார்.

"மாற்றம் மட்டுமே அழிவற்றது. மற்றதெல்லாம் எவ்வளவு ஜொலித்தாலும் காலவெள்ளத்தின் ஓட்டத்தில் மங்கி படிப்படியாக மறைந்துபோகும் என்பது நிதர்சனம். ஒவ்வொரு ஆண்டும் பலப்பல மொழிகள், இனங்கள், விலங்குகள், பறவைகள் அழிந்துவருவதை ஐக்கிய நாடுகள் சபை பட்டியல் இடுகிறது. தயாரிப்பாளர் என்ற பெயரில் வலம் வந்த இனம் தமிழ் திரையுலகில் இருந்து அழிந்துவிடுமோ என்ற கவலையை தோற்றுவித்திருக்கிறது லேட்டஸ்ட் டிரண்ட்."
 

Post a Comment