மும்பை: படோடி அரண்மனையில் வெகு விமரிசையாக ஆரம்பித்துள்ள சயீப் அலிகான் - கரீனா கபூர் திருமண நிகழ்ச்சிகளில், சயீப்பின் மகனும் மகளும் பங்கேற்றனர். சயீப்பின் முதல் மனைவி அம்ரிதா சிங்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.
நடிகை கரீனாகபூரும், நடிகர் சயீப் அலிகானும் கடந்த பல வருடங்களாக காதலித்து, இப்போது திருமணம் செய்துகொள்கின்றனர். நாளை படோடி அரண்மனையில் திருமணம் நடக்கிறது.
சயீப் அலிகான் ஏற்கெனவே நடிகை அம்ரிதா சிங்கை காதலித்து திருமணம் செய்தார். அவர்களுக்கு சாரா என்ற மகளும், இப்ராகிம் என்ற மகனும் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக சயீப் அலிகான் - அம்ரிதாசிங் விவகாரத்து பெற்று பிரிந்தனர்.
அம்ரிதாசிங் தனது 2 குழந்தைகளுடன் லண்டனில் வசித்து வருகிறார். முதல் மனைவியை விவாகரத்து செய்தாலும் சயீப் அலிகான் அடிக்கடி லண்டன் சென்று குழந்தைகளைப் பார்த்து வருகிறார். இருவரும் நட்புடனே இருப்பதாகக் கூறப்படுகிறது.
தற்போது தனது திருமணத்தை மகள், மகன் நேரில் வந்து பார்க்க வேண்டும் என்று சயீப்அலிகான் விருப்பம் தெரிவித்தார்.
இதை அவர் கரீனா கபூர் குடும்பத்தினரிடம் தெரிவித்த போது, அவர்களும் அதை ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து நேற்று இரவு நடந்த திருமண சடங்கான சங்கீத் நிகழ்ச்சியில் சாராவும் இப்ராகிமும் கலந்து கொண்டனர். முதல் மனைவி அம்ரிதாவும் நிகழ்ச்சிக்கு வந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை நடக்கும் தந்தை திருமணத்தில் மகளும், மகனும் கலந்து கொள்கிறார்கள். அம்ரிதாவும் வருவார் என்று கூறப்படுகிறது.
Post a Comment