ரஜினி கேட்டும் கூட, பாலச்சந்தரின் படத்துக்கு இசையமைக்க மறுத்துவிட்டேன் என்று இசைஞானி இளையராஜா கூறியுள்ளார்.
பிரபல வார இதழில் இளையராஜா வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். புதுப்புது அர்த்தங்கள் படத்துக்குப் பிறகு பாலச்சந்தர் படங்களுக்கு அவர் இசையமைக்காமல் போனது, அதுவும் ரஜினி கேட்டும் கூட இசையமைக்க மறுத்தது பற்றி வாசகர் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.
அந்த கேள்வி பதில்:
கேள்வி: புது புது அர்த்தங்கள் படத்திற்கு பிறகு நீங்கள் பாலசந்தர் படங்களுக்கு இசையமைக்கவில்லையே, ஏன்?
பதில்: புது புது அர்த்தங்கள் படத்திற்கு ரீரெக்கார்டிங் நடக்க வேண்டிய நேரத்தில் இங்கே ஸ்ட்ரைக் இருந்தது. அதனால் சிவா என்கிற படத்துக்காக நான் பாம்பே போயிருந்தேன். அப்போ கவிதாலயாவிலிருந்து அனந்தும் நடராஜனும் வந்து என்னைச் சந்திச்சாங்க.
'சார் படம் ரிலீஸ் ஃபிக்ஸ் பண்ணியாச்சு. ஆனால் ஸ்டிரைக் நடந்துகிட்டிருக்கு. நீங்களும் பாம்பேயிலிருந்து வர முடியாது. நாங்க உங்களுக்காக காத்திருந்து ரெக்கார்ட் பண்ணுறதுக்கும் டைம் இல்லாமல் இருக்கு. அதனால் நாங்க ட்ராக் எடுத்து போட்டுக்குறோம்,' என்றார்கள்.
'அப்போ உங்களுக்கு டைட்டிலில் இளையராஜா என்று பெயர் மட்டும்தான் போட வேண்டும். என் மியூசிக் உங்களுக்கு தேவையில்லைன்னு தெரியுது. என்னோட பெயரை வியாபாரத்திற்காக பயன்படுத்திக்கப் போறீங்க. இதுக்கு டைரக்டரும் உடந்தையா இருக்காரு இல்ல. நீங்க பண்றதை பண்ணிக்கோங்க,' என்று சொல்லி விட்டுவிட்டேன்.
அப்புறம் ரொம்ப நாள் கழித்து கவிதாலயாவிலிருந்து வந்து மியூசிக் பண்ண சொன்னபோது 'இவங்களுக்கு நம் பெயர் மட்டும்தான் முக்கியமா இருக்கு. நம்மோட இசை இல்ல. அதனால் நாம் ஏன் மியூசிக் பண்ணணும்'னு நினைச்சேன்.
அப்புறம் ரஜினியை வெச்சு படம் எடுத்தபோது ரஜினியையே பாலசந்தர் என்கிட்ட அனுப்பினார். ஆனால் 'ஏன் நீங்க அவர் படத்துக்கு இசையமைக்க மறுத்தீங்கன்னு' அவரும் என்கிட்ட கேட்கல. நானும் சொல்லல.
அவர் என் படத்துக்கு மியூசிக் பண்ணணும்னுதான் கேட்டார். பாலசந்தரே ரஜினிகிட்ட நடந்த விஷயங்களை சொல்லி என்கிட்ட அனுப்பியிருக்கலாம். இல்ல ரஜினியாவது கே.பி சாரை நான் பேச சொல்றேனு சொல்லியிருக்கலாம். எதுவும் நடக்கல. அதனாலதான் ரஜினி கேட்டும்கூட நான் அந்த படத்துக்கு மியூசிக் பண்ணல. இதுதான் காரணம்."
Post a Comment