தலைமுறையை தாண்டி நட்பை அறியச் செய்த 'நீயா? நானா?'

|

Vijay Tv Neeya Naana Talk Show11

நட்பு என்பது ஒரு கொண்டாட்டம் ! நீண்ட கால நட்பு ஒரு உன்னதமான அனுபவம். ஒருவருடன் நீண்டகாலம் நட்பில் இருப்பது ஒரு ஆனந்தமான அனுபவம். அநேகம் பேருக்கு அது வாய்த்துவிடுவதில்லை. இந்த உன்னதமான உணர்வினை குறித்து விஜய் டிவியின் நீயா நானாவில் விவாதித்தனர்.

பக்கத்து வீட்டிலோ, பள்ளிப்பருவத்திலோ, கல்லூரி காலத்திலோ, அலுவலகத்திலோ எங்காவது ஒரு இடத்தில் நட்பு பூத்திருக்கும். அது தலைமுறையை தாண்டியும் தொடரும். அதுபோன்ற நட்பானவர்கள் தங்களின் அழகான அனுபவங்களை நேற்றைய நீயா நானா நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டனர்.

நண்பர்களுக்கு இடையே பட்டப்பெயர் சூட்டி அழைத்த தருணங்கள், எம்.ஜி.ஆர். மிளகா, கரப்பான், மூக்கா, மாமா, மொக்க கோவிந்தன், சடை சரவணன், சூப்பிரண்ட், போன்ற பெயர்களை சொல்லும்போதே முகத்தில் மகிழ்ச்சி இழையோடியது.

அதை விட ஒரு அழகியல் என்னவென்றால் நண்பர்களை கண்டுபிடிப்பதற்காக தனது உடையில் செல்போன் எண்ணை மாட்டிக்கொண்டு வந்திருந்தார் ஒரு பங்கேற்பாளர்.

காதல் மட்டுமல்ல நட்பு பூப்பது கூட ஒரு அழகான தருணம்தான். துன்பமான தருணத்தில் கை கொடுப்பது நட்பு. கண்ணீர் வழியும் போது கண்களைத் தாண்டிப் போகும் முன் துடைக்கின்றன கைகள்தான் நட்பின் கரம். அந்த அளவிற்கு ஒரு உயர்வான இடம் நட்பிற்கு உண்டு என்று தங்களின் கருத்துக்களை பதிவு செய்தனர் பங்கேற்பாளர்கள்.

நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்களாக எழுத்தாளர் மனுஷ்யபுத்ரன், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்று நட்பு பற்றிய தங்களின் கருத்துக்களை பதிவு செய்தனர்.

நீண்டகால நட்பு என்பது இன்றைக்கு தேவையில்லை என்பது போன்ற கண்ணோட்டத்தில் பேசினார் மனுஷ்யபுத்ரன். நட்பை புரிந்து கொள்ள முயற்சி செய்திருக்கிறோமா

இந்த 15 வருட நட்பு கூட திடீரென்று ஒருநாள் உடைந்து போகிறது. கண்ணாடிச்சுவர் போன்றதா நட்பு என்று கேள்வி எழுப்பினார். என் வாழ்க்கையின் மிகப்பெரிய துரதிஷ்டம் பழைய நண்பர்களை திரும்பவும் சந்திப்பதுதான் என்றார் மனுஷ்யபுத்ரன்.

நட்பு என்பது அறிவுப்பூர்வமானதா, உணர்வுப்பூர்வமானதா? என்று விவாதம் திரும்பியது. இந்த கருத்தை ஒட்டிப் பேசிய திருச்சி சிவா, இசைக்கு மொழி கிடையாது அதுபோல நட்புக்கும் மொழி கிடையாது. இவரோடு இருந்தால், இவர் அருகில் இருந்தால் மனதிற்கு ஒரு தெம்பு ஏற்படுகிறது. அதுதான் நட்பு. அதற்கு மொழி தேவையில்லை என்றார்.

நட்புக்கு ஒரே சிந்தனை, ஒரு கொள்கை என்பது அவசியமில்லை. நண்பரைப் பற்றிய சிந்தனை வரும்போது அவர் நம்மோடு கூட இருந்தால் பரவாயில்லை என்று தோன்றும். பழைய நண்பர்களைத்தேடித்தான் என்மனம் போகும் என்று கூறினார் சிவா.

நட்பு என்பது அறிவுப்பூர்வமாக இருக்கவேண்டியதில்லை. உணர்வு பூர்வமாக இருக்கவேண்டும். இதுதான்

புரிதல் என்பது நட்புக்குள் அவசியம். இந்த உறவு நட்புக்குள் இன்றைக்கு இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்றுதான் கூறுவேன் என்று தனது கருத்தினை பதிவு செய்தார் மனுஷ்யபுத்ரன்.

நீண்ட நாட்களாக யாராவது ஒருவரை பார்க்கத்துடிக்கிறீர்களா என்று கோபிநாத் கேட்டதற்கு, பள்ளிப் பருவத்தில் தன்மீது அக்கறை செலுத்திய நண்பரை காண துடிக்கிறேன் என்று கூறினார் மனுஷ்ய புத்ரன்.

இதே கேள்வியை சிவாவிடம் முன்வைத்தார் கோபிநாத். விலகிப்போன நண்பர்கள் என்று எனக்கு யாரும் இல்லை. நட்பு அறுந்துபோகாமல் அனைவரும் என் கைக்குள் இருக்கின்றனர் என்றார். செப்டம்பர் 17 அன்று நாங்கள் அனைவரும் எங்கள் கல்லூரியில் ஒன்று கூடுவோம். அனைவரும் எண்ணங்களை பகிர்ந்து கொள்வோம் என்றார்.

நிகழ்ச்சியின் இடையே நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்களாக இருப்பவர்களைப் பற்றி ஒளிபரப்பினார்கள். அண்ணன் தம்பிகளாக இருப்பவர்களே ஒரே குடும்பத்தில் இருக்க சிரமப்படும் இந்த நேரத்தில் நண்பர்கள் இருவரும் ஒரே குடும்பத்தில் ஒற்றுமையாக இருப்பதை நிகழ்ச்சியில் காட்டியது கவிதையாய் அமைந்திருந்தது.

நட்பு என்பது அழகான விசயம். இன்றைய தலைமுறைக்கு நட்பினை அறிமுகம் செய்வதற்காகவே இந்த விவாதம் நிகழ்த்தப்பட்டது என்று இனிய நினைவுகளோடு முடித்தார் கோபிநாத்.

நீண்ட காலம் நட்பாய் இருப்பவர்கள் என்ன சொல்றீங்க?

 

Post a Comment