கல்லூரியுடன் எந்த தொடர்பும் இல்லை

|

College does not have any contact with us

ஊட்டியில் மெரிட் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்ற கல்லூரி உள்ளது. கல்லூரியில் பி.இ, பி.டெக்,  எம்.பி.ஏ, போன்ற பாடப்பிரிவுகள் உள்ளன. கல்லூரியின் இயக்குனராக பிரபல நடிகர் ஸ்ரீகாந்த்தின் மனைவி வந்தனா உள்ளார். வந்தனா தந்தை சாரங்கபாணி கல்லூரி டீனாகவும், தாய் ஷாலினி இயக்குனராகவும் உள்ளனர். கல்லூரியில் கடந் தாண்டு படிப்பை முடித்தவர்கள் பணிக்கு சென்றுள்ளனர். சிலர் மேற்படிப்பு படிக்க சென்றுள்ளனர். ஆனால் அனைத்து கல்வி  நிறுவனங்களும் 'நீங்கள் அங்கீகாரம் பெறாத கல்லூரியில் படித்துள்ளீர்கள். சான்றிதழ் செல்லாது' என தெரிவித்துள்ளன. இதனால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்து அண்ணா பல்கலைகழகத்துக்கு சென்று சான்றிதழ்களை காட்டியுள்ளனர். நாங்கள் அங்கீகாரம் தரவில்லை என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது.

மாணவர்களின் பெற்றோர்கள் கல்லூரியை அணுகியுள்ளனர். ஆனால் அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை. பாதிக்கப்பட்ட மாணவர்கள் கொடுத்த புகாரின் பேரில் ஊட்டி ஜி1 போலீசார் நேற்று கல்லூரி டீன் சாரங்கபாணி, இயக்குனர்கள் ஷாலினி, வந்தனா, கல்லூரி முதல்வர் அசோக்குமார், சேர்க்கை ஒருங்கிணைப்பாளர் அசோக் சிவகுமார் மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீசார் கூறுகையில், 'நடிகர் ஸ்ரீகாந்துக்கும் இக்கல்லூரிக்கும் உள்ள தொடர்பு குறித்தும் விசாரிக்கப்படும். இவ்வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்திய பின் தேவைப்படும்பட்சத்தில் மேலும் புதிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்படும்' என்றனர். ஸ்ரீகாந்த் கூறுகையில், "எனக்கும், மனைவிக்கும் கல்லூரியுடன் எந்த தொடர்பும் இல்லை. மாமியார் ஷாலினிக்காக எனது பெயர் தேவையில்லாமல் இதில் இழுக்கப்படுகிறது" என்றார்.
 

Post a Comment