எந்த ஒரு திரைபடத்தின் தலைப்புமே யோசிக்க வைக்கவேண்டும். படத்தின் கதையை புரியவைப்பது அந்த தலைப்புதான். ஆசிரியர்கள் மாணவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள சாட்டை திரைப்படம் அந்த படத்திற்கு ஏற்ற சரியான தலைப்பு என்று பெற்றோர்களும், ஆசிரியர்களும், மாணவர்களும் சான்றிதழ் அளித்தனர்.
காந்தி ஜெயந்தியை ஒட்டி விஜய் டிவியில் சாட்டை திரைப்படக்குழுவினர் பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. திரைப்படத்தின் தயாரிப்பாளர், நடிகர்கள் சமுத்திரகனி, தம்பி ராமையா, மாணவர்களாக நடித்த நடிகர்கள் இதில் பங்கேற்றனர்.
ஆசிரியர்களும், பெற்றோர்களும், மாணவர்கள் சங்கத்தினரும் அவர்களை சந்தித்து உரையாடினர். ஒவ்வொரு ஆசிரியரும் எந்த அளவிற்கு இதனை ரசித்து பார்த்தோம் என்பதை பகிர்ந்து கொண்டனர். இதுமாதிரியான ஒரு நல்ல திரைப்படத்தை கொடுத்ததற்காக திரைப்பட தயாரிப்பாளருக்கும் அதில் நடித்த நடிகர்களுக்கும் மாணவர் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்துக்கொண்டனர். சாட்டை திரைப்படம் பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவருக்குமானது என்று நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அனைவருமே ஒத்துக்கொண்டனர். அடுத்த ஆண்டு ஆசிரியர் தயாளனுக்கு நல்லாசிரியர் விருது கிடைக்கும் என்று பெற்றோர்கள் ஆசிரியர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டபோது அனைவரும் கரவொலி எழுப்பி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
காந்தி ஜெயந்தி தினத்தை ஒட்டி ஒளிபரப்பான இந்த சிறப்பு நிகழ்ச்சி சினிமா நடிகர்களை அழைத்து சாதாரணமாக பேட்டி காணாமல் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களையும் அழைத்து அவர்களையும் கலந்துரையாடலில் பங்கேற்கச் செய்தது சிறப்பானதாக அமைந்திருந்தது. விஜய் டிவியால் மட்டுமே இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப முடியும் என்று மீண்டும் நிரூபித்துள்ளனர்.
Post a Comment