மாண்டியா: தமிழகத்திற்குக் காவிரியிலிருந்து தண்ணீர் திறந்து விடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். தண்ணீர் திறப்பை எதிர்த்து பெங்களூரில் ராஜ்பவனை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவோம் என்று கன்னட நடிகர் அம்பரீஷ் அறிவித்துள்ளார். கர்நாடகம் தண்ணீர் திறந்து விடுவதை எதிர்த்து அவர் மாண்டியாவில் நடந்த ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொண்டார்.
காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட்டு வருகிறது. இதற்கு கர்நாடகத்தில் சில மாவட்டங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பல்வேறு விவசாய அமைப்புகள், கன்னட அமைப்புக் மைசூர், மாண்டியா, சாம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்களில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
மாண்டியாவில் நேற்று நடந்த தர்ணாவில் நடிகர் அம்பரீஷ் கலந்து கொண்டார். இந்தப் போராட்டத்திற்கு கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பு ஏற்பாடு செய்தது. அதன் தலைவர் நாராயண கெளடாவும் போராட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது அம்பரீஷ் பேசுகையில்,தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகி கர்நாடக விவசாயிகளுக்கு நீதி கிடைக்க செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசு உடனே எடுக்க வேண்டும். கர்நாடக விவசாயிகளுக்கு கன்னட திரையுலகம் எப்போதுமே ஆதரவாக இருக்கும். வருகிற 6-ந் தேதி தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை எதிர்த்து கவர்னர் மாளிகை நோக்கி பிரமாண்ட ஊர்வலம் நடத்தப்படும் என்றார் அவர்.
Post a Comment