முத்தத்துக்கு நிறம் உண்டா? - கவிஞர் வைரமுத்து சொன்ன அர்த்தமுள்ள பதில்!!

|

Vairamuthu Explains Colour Kisses

சென்னை: முத்தத்துக்கு நிறம் உண்டா... நிச்சயம் உண்டு. முத்தத்தில் நிறம் என்பது குணத்தைக் குறிக்கும் என்றார் கவிஞர் வைரமுத்து.

ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து, சீனுராமசாமி இயக்கியுள்ள `நீர்ப்பறவை' படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழாவில் கவிஞர் வைரமுத்துவின் பேச்சு ஹைலைட்டாக அமைந்தது.

அவர் பேச்சின் 'முத்தப் பகுதி' மட்டும் இங்கே:

"நீர்ப்பறவை, கடலோர கிராமத்தில் நிகழும் கிறிஸ்தவ வாழ்வியல் சார்ந்த காதல் கதை. சீனுராமசாமி இந்த கதையை சொல்லி முடித்தவுடன், கதை வாசனை வீசுமாறு விவிலியச் சொற்களால் பாடல் எழுத வேண்டுமென்று ஆசைப்பட்டேன். பைபிளை மறுவாசிப்பு செய்தேன்.

கடவுளுக்கும், காதலுக்கும் ஒரு மெல்லிய வேறுபாடுதான் இருக்கிறது. சத்தியமும் ஜீவனுமாய் நானே இருக்கிறேன் என்ற வரி கர்த்தருக்கு மட்டுமல்ல, காதலுக்கும் பொருந்தும். அதனால்தான் 'என்னுயிரை அர்ப்பணம் செய்தேன். உன் பெயரை ஸ்தோத்திரம் செய்தேன். சத்தியமும் ஜீவனுமாய் நீயே நிலைக்கிறாய்' என்று காதலன் பாடுவதாக எழுதினேன்.

எனக்கு முன்னே பேசிய இயக்குனர் சீனுராமசாமி ஒரு பரீட்சை வைத்துவிட்டு போயிருக்கிறார். 'கிச்சு கிச்சுப் பண்ணும் கிறிஸ்துவப் பெண்ணே பச்சை முத்தம் போடவா' என்று எழுதியிருக்கிறீர்களே...பச்சை முத்தம்-சிவப்பு முத்தம் என்றெல்லாம் முத்தங்களுக்கு நிறம் உண்டா? கவிஞர்தான் விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்'' என்று இங்கு பேசினார். அதை விளக்குவது என் கடமை ஆகிறது.

பச்சை முத்தம்...

பச்சையென்றால் இங்கே நிறமல்ல. குணம். பெருந்தலைவர் காமராஜரை பச்சை தமிழர் என்று குறிப்பிடுவோம். பச்சை என்றால் அசல் என்று அர்த்தம். போலி முத்தம் போடாதே பெண்ணே. அசல் முத்தம் போடு என்று அதற்கு அர்த்தம். இது முதல் பொருள்.

பிறந்த குழந்தையைப் பச்சைக் குழந்தை என்பார்கள். அங்கே பச்சை என்பதற்கு புதிது என்று பொருள். இதுவரை எனக்கு முத்தமென்ற அனுபவம் இல்லை. இதுதான் முதல் முத்தம். அதனால் எனக்கு புத்தம் புதிய முத்தம் போடு என்பது இரண்டாவது பொருள்.

மூன்றாம் பொருள் ஒன்று உண்டு. அதுதான் முக்கியமான பொருள். அரைகுறை முத்தம் போடாதே. அது அழிந்துவிடும். பச்சை குத்துவது போல் நச்சென்று ஒரு முத்தம் போடு என்பது மூன்றாம் பொருள். இத்தனை அர்த்தம் தெரிந்தால்தான் முத்தம் ருசிக்கும்," என்றார்.

 

Post a Comment