ஏன் சூர்யா.. ஏன்?

|

ஏன் சூர்யா.. ஏன்?
சூர்யா நடித்தால் நிச்சய வெற்றி என்ற நிலை அப்படியே தலைகீழாக மாறிப் போயிருக்கிறது, ஜஸ்ட் ஒன்றரை ஆண்டுகளில். காரணம், பெரிய இயக்குநர்கள், பெரிய பட்ஜெட் என்று மட்டும் பார்த்த சூர்யா, நல்ல கதையைப் பார்க்காததுதான்.

இன்னொன்று, புதியவர்கள், அனுபவசாலிகள் என்றெல்லாம் பார்க்காமல் திறமையாளர்களுக்கு கால்ஷீட் கொடுத்து வந்த சூர்யா, இப்போது, அனுபவ இயக்குநர்களுக்கு மட்டுமே கால்ஷீட் தருவதுதான்.

ரத்த சரித்திரம்
சூர்யாவின் இந்தத் தோல்விப்பயணத்தின் துவக்கம் ரத்தசரித்திரம். இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு என்று மூன்று மொழிகளில் வெளியானது.
இதற்காக செய்யப்பட்ட விளம்பரங்கள் பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பின. ஆனால் படம் அதற்கேற்ப இல்லாத நிலையில் படுதோல்வியைச் சந்தித்தது. இந்தியில் இந்தப் படம் தனக்கான வாயிலாக அமையும் என்ற சூர்யாவின் எதிர்ப்பார்ப்பும் பொய்த்தது.

ஏழாம் அறிவு
ஏ ஆர் முருகதாஸை மட்டுமே பெரிதாக நம்பி சூர்யா நடித்த படம். ஆரம்ப 20 நிமிடங்கள் தவிர, வேறு எதுவும் இந்தப் படத்தில் க்ளிக் ஆகவில்லை. அந்த நோக்கு வர்ம டாங்லீ ஏக கிண்டலுக்குள்ளானார்.
ஆனால் வசூலில் வெற்றி என்று தயாரிப்பு தரப்பு அறிவித்துவிட்டது. ஆனால் சூர்யாவைப் பொறுத்தவரை இது ஒரு க்ளீன் வெற்றிப் படம் என்று சொல்ல முடியாத நிலை.

மாற்றான்
சூர்யாவின் படங்களுக்கு இதுவரை தரப்படாத முக்கியத்துவம், விலை இந்த மாற்றானுக்குதான் தரப்பட்டது. படத்தில் அவரும் குறைவின்றி செய்திருந்தார். தொழில்நுட்ப ரீதியில் ஏகப்பட்ட உழைப்பை இந்தப் படம் பெற்றிருந்த போதும், பார்வையாளர்களை சுவாரஸ்யமாக வைக்கத் தவறிவிட்டது.

சிங்கம்தான் கடைசி…
2010-ல் வெளியான சிங்கம்தான் சூர்யாவுக்கு அதிரடியான வெற்றிப்படமாக அமைந்தது. விமர்சன ரீதியில் அந்தப் படத்துக்கும் நிறைய எதிர்மறை கருத்துகள் இருந்தாலும், படம் பார்த்த ரசிகர்களை வேறு எதைப் பற்றியும் யோசிக்க விடாமல் கட்டிப் போட்டது சிங்கம். அந்த வெற்றி தந்த நம்பிக்கையில் இப்போது சிங்கம் 2வை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தேவை, அணுகுமுறையில் மாற்றம்…
விஜய், அஜீத்துக்கெல்லாம் இல்லாத ஒரு ப்ளஸ் சூர்யாவுக்கு உண்டு. அது அனைத்து மட்டங்களிலும் அவருக்குள்ள ரசிகர் வட்டம். அதுவும் குடும்ப ரசிகர்கள் அவருக்கு அதிகம். திரும்பத் திரும்ப டிஎன்ஏ, வெளிநாட்டு சதி என ஒரே மாதிரி திரைக்கதைக்குள் சிக்கி சுவாரஸ்யமற்ற படங்களைத் தருவதன் மூலம் அந்த ரசிகர்களை அவர் இழக்கும் அபாயமுள்ளது.

புதியவர்களை நம்புங்கள்…
சினிமாவைப் பொறுத்தவரை வெற்றி யார் மூலமும் கிடைக்கலாம். அது யாரிடமும் உதவியாளராகக் கூட இல்லாமல் நேரடியாக படம் இயக்குபவர் மூலம் கூட சாத்தியமே. முருகதாஸ்கள், ராம்கோபால் வர்மாக்கள்தான் வெற்றியின் சூத்திரதாரிகள் என நம்பாமல், நல்ல கதைகள், திறமையான புதியவர்களை நம்பத் தொடங்கினால் சாத்தியமாகலாம்..!
 

Post a Comment