ஹைதராபாத்: தனது தெலுங்கு ரசிகர்களுக்காக ஹைதராபாதில் கச்சேரி நடத்துகிறார் இசைஞானி இளையராஜா.
குண்டல்லோ கோதாவரி படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது இந்த நிகழ்ச்சி நடக்கிறது.
தெலுங்கு சினிமா இசையில் இளையராஜாவின் பங்களிப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. சிரஞ்சீவி உள்ளிட்ட முக்கிய நடிகர்களின் அதிக படங்களுக்கு இசை இளையராஜாதான். மோகன் பாபு படங்களிலும் இளையராஜாவுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. தனிப்பட்ட முறையில் ராஜாவும் நீண்ட காலம் நட்பு பாராட்டி வருபவர் மோகன் பாபு.
குண்டல்லோ கோதாவரி படத்தைத் தயாரிப்பவர் மோகன்பாபு மகள் லட்சுமி மஞ்சு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா ஹைதராபாதில் வரும் அக்டோபர் 17-ம் தேதி நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியுடன் இளையராஜா கச்சேரியும் நடக்கிறது. குண்டல்லோ கோதாவரி படப் பாடல்களுடன், தனது புகழ்பெற்ற மற்ற பாடல்களையும் இசைக்கவிருக்கிறார் இளையராஜா.
2011-ம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளருக்கான, ஆந்திர அரசின் உயரிய நந்தி விருதை 'ஸ்ரீராமராஜ்யம்' படத்துக்காக சமீபத்தில் பெற்றார் இசைஞானி. அதிகமுறை நந்தி விருது பெற்றவர் இளையராஜாதான் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment