மும்பை: பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் சயீப் அலிகான்- கரீனா கபூர் திருமணம் இன்று மும்பையில் நடக்கிறது.
மும்பையில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பதிவுத் திருமணமாக இந்த நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மறுதினம் (18-ந் தேதி) டெல்லியில் திருமண வரவேற்பு நடைபெறுகிறது.
படோடி அரண்மனையிலும் ஒரு வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. முதலில் திருமணத்தையே இங்குதான் நடத்துவதாக அறிவித்திருந்தனர். அதற்கேற்ப அரண்மனையும் புதுப்பிக்கப்பட்டது.
சயீப் அலிகான் மறைந்த கிரிக்கெட் வீரரும், பட்டோடி நவாப்புமான மன்சூர் அலிகான் பட்டோடி- நடிகை ஷர்மிளா தாகூரின் மகன் ஆவார்.
கரீனா கபூர் நடிகர் ரந்தீர் கபூரின் இளைய மகள். அத்துடன் பழம்பெரும் நடிகர் ராஜ்கபூரின் பேத்தி. இதனால் சயீப் அலிகான்- கரீனா கபூர் ஜோடியின் திருமண வரவேற்பு டெல்லியில் மிகவும் பிரமாண்ட முறையில் நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் பங்கேற்பார் என்று தெரிகிறது.
இதற்கிடையே திருமணத்தையொட்டி, சங்கீத் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. மும்பை பாந்திரா பகுதியில் உள்ள கரீனா கபூர் வீட்டின் மாடியில் நடந்த இந்நிகழ்ச்சியில் பபிதா, நீது சிங், சோகா அலிகான், குணால் கெமு, சஞ்சய் கபூர், துஷார் கபூர், ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் மல்கோத்ரா, மலைக்கா அரோரா கான், கரீனாவின் நெருங்கிய தோழி அம்ரிதா அரோரா உள்பட குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
Post a Comment