தயாரிப்பாளர் சந்திரசேகரன் மோசடி வழக்கு.. முன்ஜாமீன் கேட்கும் செல்வராகவன்

|

Director Selva Seeks Anticipatory Bail In Salem

சென்னை: பிரபல இயக்குநர் செல்வராகவன் மீது தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரன் மீண்டும் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி மனு செய்துள்ளார் செல்வராகவன்.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் செல்வராகவன் தாக்கல் செய்த மனுவில், "சரவணா கிரியேஷன்ஸ் என்ற சினிமா கம்பெனியின் உரிமையாளர் சேலம் ஏ.சந்திரசேகரன். இவர் காசிமேடு என்ற படத்தை தயாரிக்க விரும்பினார். இதற்கு கதை, திரைக்கதை, இயக்கம் ஆகிய பணிகளை நான் செய்துகொடுக்க வேண்டும் என்று 27.10.04 அன்று என்னுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார்.

இதற்கு ரூ.2 கோடி சம்பளம் கேட்டேன். ரூ.90 லட்சம் முன்பணம் கொடுத்தார். ஆனால் அந்த படத்தில் பணியாற்ற முடியவில்லை. இதுபற்றி எனக்கு கடிதம் எழுதி முன்பணத்தை திருப்பிக்கேட்டார். எனவே 27.9.05, 13.7.06, 10.4.07 ஆகிய தேதிகளில் அந்த பணத்தை மூன்று தவணைகளாகத் திருப்பிக்கொடுத்தேன்.

இந்த நிலையில் 2010-ம் ஆண்டு சிட்டி சிவில் கோர்ட்டில் என்மீது வழக்கு தாக்கல் செய்து, எனது அடுத்த படம் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்துக்கு தடை விதிக்கும்படி கோரியிருந்தார். அந்த வழக்கில், ரூ.90 லட்சத்தை திரும்பப் பெற்றுக் கொண்டதை சந்திரசேகரன் ஒப்புக்கொண்டிருந்தார்.

மேலும், ரூ.1.10 கோடி பணத்தை சந்திரசேகருக்கு நான் `செட்டில்'' செய்யும்வரை, ஆயிரத்தில் ஒருவன் படத்தை வெளியிடமாட்டேன் என்று அதன் தயாரிப்பாளர் ரவீந்திரனிடம் 2006-ம் ஆண்டு வாய்மொழியாக ஒப்பந்தம் செய்திருந்ததாக வழக்கில் கூறியிருந்தார். இது தவறான ஒன்று. பின்னர் அந்த சிவில் வழக்கு திரும்பப் பெறப்பட்டது.

இந்த நிலையில் என் மீது குற்ற வழக்குப் பதிவு செய்யும்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசிடம் சந்திரசேகரன் மனு கொடுத்தார். இதுசம்பந்தமாக போலீசுக்கு உத்தரவிடும்படி மாஜிஸ்திரேட்டு கோட்டிலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் புகாரில் சிவில் பிரச்சினை இருப்பதாக கூறி, புகாரை ரத்து செய்துவிட்டதாக போலீசார் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் அந்த அறிக்கையை மாஜிஸ்திரேட்டு ஏற்க மறுத்துவிட்டார். மீண்டும் விசாரணை நடத்தும்படி அவர் உத்தரவிட்டார். சந்திரசேகரின் புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யும்படி நான் தாக்கல் செய்த வழக்கு விசாரணை, உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த பிரச்சினை தொடர்பாக மத்தியஸ்தம் மையத்தில் கடந்த மாதம் 10-ந் தேதி ஆஜராகி பேசினோம். மத்தியஸ்தர் முன்னிலையில் ரூ.10 லட்சத்தை சந்திரசேகரனிடம் கொடுத்தேன். அப்படி என்றாலும் சந்திரசேகரன் தனது புகாரை திரும்பப்பெறவில்லை.

இந்த வழக்கில் கொலை மிரட்டல் குற்றச்சாட்டும் தவறாக சேர்க்கப்பட்டுள்ளது. என்னை வேண்டுமென்றே தொந்தரவு செய்கிறார். இந்த வழக்கில் கைது செய்யப்படுவேன் என்று அஞ்சுகிறேன். எனவே எனக்கு முன்ஜாமீன் அளித்து உத்தரவிட வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி விசாரித்தார். மனு மீதான விசாரணையை நவம்பர் 1-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

 

Post a Comment