"என் மகன் கூட 15 நாள் குடும்பம் நடத்தின உன் தங்கச்சிக்கு எவ்வளவு பணம் வேணுமோ கேள் நான் கொடுக்கிறேன். அதை வாங்கிட்டு நீ வீட்டுக்கு கூட்டிட்டு போயிடு"
இது என்னவென்று பார்க்கிறீர்களா? தமிழ் தொலைக்காட்சியில் மருமகளைப் பார்த்து மாமியார் பேசிய வசனம்தான். சகிக்க முடியாத இந்த வசனம் மட்டுமல்ல இதை விட கொடுமையான வசனங்கள் எல்லாம் தமிழ் கூறும் தொலைக்காட்சி நல் உலகில் உலா வருகின்றன. இதைக் கேட்கும் இல்லத்தரசிகளுக்கு ரத்தக் கொதிப்பு அதிகமாகி உடல்நலக்குறைவு ஏற்படுகிறதாம்.
மெகா சீரியல்கள் ஆரம்பத்தில் நன்றாகத்தான் இருந்தன. குடும்ப சென்டிமென்ட், காமெடி என்று போய்க் கொண்டிருந்தவர்கள் பின்னர் மென்மையான காதலுக்கு மாறினர். ஆனால் அதுவே நாளடைவில் குடும்பத்தைக் கெடுப்பது, கள்ளக்காதல், கண்டக்க முண்டக்க காதல் என்று தடம் மாறி இப்போது தொட்டால் ஷாக் அடிக்கும் அளவுக்கு மாறி நாறிப் போயுள்ளன.
குறிப்பாக அனைத்து சீரியல்களுமே சொல்லி வைத்தாற் போல முறை தவறிய காதல்கள், இரண்டு பொண்டாட்டி கதை, காது கூச வைக்கும் வசனங்கள், லேசுபாசான கவர்ச்சி என்று மாறிப் போயுள்ளன.
புதிதாக இப்பொழுது சொந்த பந்தம் என்ற சீரியல் ஒளிபரப்புகின்றனர். எந்த டிவியில் இது வருகிறது என்பதை சொல்லத் தேவையில்லை, உங்களுக்கே தெரிந்திருக்கும். ஆரம்பத்தில் கிராமத்து கதையாகத்தான் தொடங்கியது. பின்னர் திருமணத்தில் நடந்த குழப்பத்தில் அண்ணனின் நண்பனே பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான். புகுந்த வீட்டில் இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. தனது மகனை மணந்த பெண்ணை, அதாவது மருமகளை மாமியார்க்காரி கடுமையாக திட்டி வீட்டை விட்டு விரட்டுகிறாள். கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறார்கள். வீட்டுக்கு வெளியே வந்து விழுகிறாள் மருமகள். அந்த நேரம் பார்த்து வீட்டுக்கு வருகிறான் தனது தங்கையைப் பார்க்க அவளுடைய அண்ணன்.
தங்கையை இப்படி விரட்டுகிறீர்களே என்று அவன் நியாயம் கேட்கும்போது மாமியார்க்காரி பேசிய வசனம் உண்மையிலேயே சற்று கடுமையானதுதான். "உன்னோட தங்கச்சி என் மகன் கூட 15 நாள் குடும்பம் நடத்தியிருக்கிறாள். அதுக்கு என்ன பணம் வேணுமோ கேள் கொடுக்கிறேன். உன்னோட தங்கச்சியோட ஒரு நாள் கூலி என்ன சொல் தருகிறேன். காசுக்காக சோரம் போற உன் தங்கச்சியைக் கூட்டிக்கிட்டு வெளியே போ" என்று காரசாரமாக பேசுகிறாள்.
இதுமட்டுமல்ல காலை 10.30 மணி தொடங்கி இரவு 10.30 மணிவரை ஒளிபரப்பாகும் அனைத்து தொடர்களிலும் இதுபோன்ற காதுகூசும் வசனங்களைத்தான் ஒளிபரப்புகின்றனர். இதை கேட்கும் இல்லத்தரசிகளுக்குத்தான் ரத்தக்கொதிப்பு ஏற்படுகிறது. ஆனால் இப்படிப்பட்ட உணர்ச்சிகரமான சீரியல்களைப் போடுவதில் அந்த டிவிக்காரர்களுக்குத்தான் எதுவுமே கூசுவதில்லை போல.
Post a Comment