சென்னை: இந்திய சினிமா உலக சினிமாவை நோக்கி பயணிக்க வேண்டும். அதற்கான வேலைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.
இந்திய தொழில் வர்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பு சார்பாக சென்னையில் அதன் மூன்றாவது மாநாடு மற்றும் கருத்தரங்கம் அக்டோபர் 16, 17 தேதிகளில் நடைபெறுவதையொட்டி, கமல் பேட்டியளித்தார்.
அவர் கூறுகையில், "இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்திய தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்காக சேவை மனப்பான்மையுடன் மகாத்மா காந்தியால் 1927ஆம் ஆண்டு ஃபிக்கி தொடங்கப்பட்டது.
ஃபிக்கியின் வரலாறு சுதந்திரப் போராட்டத்தோடும் இந்தியத் தொழில் வளர்ச்சியோடும் பின்னிப் பிணைந்துள்ளது. ஊடகம் மற்றும் கேளிக்கைத் துறையில் ஃபிக்கியின் கேளிக்கைப் பிரிவு, தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகத்துடன் இணைந்து பல நல்ல கொள்கை மாற்றங்களைக் கொண்டு வந்தது. இதனால் பொழுதுபோக்குத் துறையின் வர்த்தகம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
தென்னிந்தியத் திரைப்படத் துறையினர் பயன்பெறும் வகையில் நவீன தொழில்நுட்ப உபகரணங்களின் பயன்பாடு, திரைப்படத் துறையில் புகுத்தப்பட்டுள்ள தற்போதைய உத்திகள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஃபிக்கி, கடந்த மூன்று ஆண்டுகளாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
திரைப்படங்கள், தொலைக்காட்சி, அனிமேஷன், கிராஃபிக்ஸ், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, டப்பிங், இசை போன்றவற்றில் ஏற்பட்டுள்ள நவீன தொழில் புரட்சி குறித்து பல அரிய தகவல்களை இந்த மாநாட்டில் அறிந்துகொள்ளலாம்.
இந்திய சினிமாவின் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பயிலரங்குகள், சிறப்பு வகுப்புகள், திரைக்கதையாக்க வகுப்புகள், டிஜிட்டல் திரைப்பட உருவாக்கம், டிஜிட்டல் ஒலி நுட்பம் உள்ளிட்ட திரைப்படத்துறையின் பல்வேறு பிரிவுகள் குறித்த கருத்துப் பதிவுகள் இடம்பெறுகின்றன.
இதில் இந்திய அளவில் சிறந்து விளங்கும் சினிமா கலைஞர்கள் உள்பட ஹாலிவுட் கலைஞர்கள் பலரும் கலந்துகொள்கின்றனர்.
நான் இயக்கி நடிக்கவுள்ள ஹாலிவுட் படத்தைத் தயாரிக்கும் பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரி ஆஸ்போர்னும் கலந்துகொள்கிறார். சினிமா கலைஞர்கள் கூடுகிறார்கள் என்றவுடன் இதை ஏதோ ஒரு 'ஸ்டார் நைட்' நிகழ்ச்சி என கருதிவிட வேண்டாம். நூறு ஆண்டுகளாக இந்திய சினிமாவை வளர்த்த முன்னோடிகளுக்கும் மூத்தோர்களுக்கும் சிறப்பு செய்யும் ஒரு கெüரவமான நிகழ்வு இது. இத்தகைய வாய்ப்பைப் பயன்படுத்தி இந்திய சினிமாவை உலக சினிமாவை நோக்கி பயணிக்கச் செய்வோம்," என்றார்.
Post a Comment