செம்பட்டை பட ஹீரோ திலீபன் திடீர் மரணம்

|

Actor Dhileepan Died

சென்னை: செம்பட்டை என்ற படத்தில் நடித்த இளம் நடிகர் திலீபன் மஞ்சள் காமாலையால் இன்று காலை மரணம் அடைந்தார்.

திலீபனுக்கு வயது 32. அவரது உண்மையான பெயர் பாலா. கூத்துப் பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்றவர். ராதாமோகன் இயக்கிய ‘அழகிய தீயே' படத்தில் கதாநாயகன் பிரசன்னாவின் நண்பனாக நடித்தார். ‘பட்டியல்', ‘சிந்தனை செய்' போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான 'செம்பட்டை' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். திலீபனுக்கு திருமணம் ஆகவில்லை. வடபழனியில் உள்ள கங்கை அம்மன் கோவில் தெருவில் வாடகைக்கு ரூம் எடுத்து தங்கி இருந்து சினிமாவில் நடித்து வந்தார்.

சில தினங்களுக்கு முன் அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. காய்ச்சல் மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டார்.

திலீபனின் நண்பரான ரவி என்பவர் தனது ஊரான மதுரை வத்திராயிருப்புக்கு அழைத்து சென்று அங்குள்ள மருத்துவனையில் சேர்த்து சிகிச்சை பெற வைத்தார். ஆனால் பலனில்லை.

மஞ்சள் காமாலை நோய் தாக்கி முற்றிய நிலையில் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். ஆனாலும் இன்று அதிகாலை 3 மணிக்கு திலீபன் மரணம் அடைந்தார். திலீபன் உடல் சொந்த ஊரான பட்டுக்கோட்டை ஒரத்தநாடு அருகில் உள்ள பழவங்காடு கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதி சடங்கு நடக்கிறது. திலீபனுக்கு 2 தம்பிகளும், ஒரு அக்காவும் உள்ளனர்.

 

Post a Comment