சயீப்-கரீனா பதிவு திருமணம் செய்தனர்

|

Saif-Kareena wedding

கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்த இந்தி திரைப்பட நட்சத்திரங்கள் சயீப் அலிகானும் (42) கரீனா கபூரும் (32) தங்கள் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நேற்று பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

மறைந்த இந்திய கிரிக்கெட் வீரரும், பட்டோடி நவாப்புமான மன்சூர் அலிகான் - நடிகை ஷர்மிளா தாகூரின் மகன் சயீப் அலிகான். இந்தி நடிகர் ரன்தீர் கபூரின் மகளும், மறைந்த பழம்பெரும் நடிகர் ராஜ்கபூரின் பேத்தியும்தான் கரீனா கபூர். பாலிவுட் பிரபல நட்சத்திரங்களாக சயீப் அலிகானும், கரீனாவும் கடந்த 2007ல் இருந்து காதலித்து வந்தனர். கடந்த மார்ச்சில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதை அதிகாரபூர்மாக அறிவித்தனர். இவர்களின் திருமணத்தையொட்டி சங்கீத் எனும் சடங்கு நிகழ்ச்சி கடந்¢த ஞாயிற்றுக்கிழமை பாந்த்ராவில் உள்ள கரீனாவின் வீட்டில் நடந்தது.

நேற்று முன்தினம் இரவு தாஜ்மஹால் ஓட்டலில் விருந்து நிகழ்ச்சியும், மெகந்தி நிகழ்ச்சியும் நடந்தன. இதைத் தொடர்ந்து, சயீப் அலிகானும் கரீனா கபூரும் நேற்று பிற்பகலில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். பாந்த்ராவில் உள்ள சயீப் அலிகான் இல்லத்தில் திருமண நிகழ்ச்சி நடந்தது. திருமண பதிவேட்டில் மணமகள் சார்பில் கரீனாவின் தந்தை ரன்தீர் கபூரும், தாய் பபீதாவும் சாட்சி கையெழுத்திட்டனர். மணமகன் சார்பில் அவருடைய தாய் ஷர்மிளா தாகூர் கையெழுத்து போட்டார்.
 

Post a Comment