எகிறும் ஹீரோயின்களின் பேட்டா

|

Daily Beta for heroines worries producer

தமிழ் சினிமாவில் ஹீரோயின்களின் பேட்டா எகிறி வருவதால் தயாரிப்பாளர்கள் திண்டாடி வருகின்றனர். ஒரு படத்துக்கு முன்னணி ஹீரோயின்களை புக் பண்ணும்போது மானேஜர்கள் மூலம் சம்பளம் பேசி விடுவார்கள். பிறகு ஹீரோயின் இருக்கும் மும்பை, கேரளா அல்லது ஐதராபாத்தில் இருந்து வந்து போக, பிசினஸ் கிளாஸ் விமான டிக்கெட், அவர்களுக்கான ஓட்டல் ரூம், காஸ்ட்லி கார் போன்ற செலவுகள் தனி. இது தவிர பேட்டா என்ற கணக்கில் ஒரு தொகை கொடுக்கப்படுகிறது. அது மேக்கப் மேன், ஹேர்டிரஸ்சர், காஸ்டியூமர், டச்சப் பாய், டிரைவர் சம்பளம் போன்றவற்றுக்கு நாளொன்றுக்கு ஆறாயிரத்தில் இருந்து 12 ஆயிரம் ரூபாய் வரை தயாரிப்பு தரப்பில் இருந்து வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த தொகை இப்போது 15 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் வரை வசூலிக்கப்படுவதால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சமீபத்தில், 'அலெக்ஸ் பாண்டியன்' படப்பிடிப்பில் அனுஷ்கா, பெப்சியில் உறுப்பினரல்லாத மும்பை மேக்கப் மேனை பயன்படுத்தியதாகக் கூறி பிரச்னை ஏற்பட்டது. மும்பை மேக்கப் மேன்களை பயன்படுத்தும்போது ஒரு நாள் சம்பளம் மட்டும் பத்தாயிரம் ரூபாய் மற்றும் பிசினஸ் கிளாஸ் விமான டிக்கெட். மற்ற செலவுகள் தனி. ஹேர்டிரஸ்சருக்கும் இதே சம்பளம். முன்னணி நடிகைகளான த்ரிஷா, தமன்னா, காஜல் அகர்வால், ஹன்சிகா போன்றோர் மும்பை மேக்கப் மேனைத்தான் பயன்படுத்துகிறார்கள். இதனால் தயாரிப்பாளர்கள் பேட்டாவை அதிகமாக கொடுக்க வேண்டியிருக்கிறது. சில நடிகைகள் மொத்தமாக பேட்டாவை வாங்கி அசிஸ்டென்ட்டுகள், டிரைவர் போன்றவர்களுக்கு மாத சம்பளம் கொடுத்துவிட்டு தாங்களே வைத்துக்கொள்ளும் சம்பவமும் நடக்கிறது.
''இந்த தொகை ஒரு கேரக்டர் ஆர்டிஸ்ட்டுக்கான சம்பளம். இதை ஒரு நடிகையின் பேட்டாவாக கொடுத்தால் தயாரிப்பாளர் எப்படி படமெடுக்க முடியும்?'' என்கிறார்கள்.

''படத்தில் ஹீரோயின்களுக்கு அழகு முக்கியம். மும்பை மேக்கப் மேனை பயன்படுத்தினால் லுக் ஸ்டைலாக இருக்கிறது. அதனால்தான் அவர்களை நாடுகிறோம்" என்கிறார் முன்னணி ஹீரோயின் ஒருவர். ஆனால் மும்பை மேக்கப் மேனை பயன்படுத்தாத அஞ்சலி, நயன்தாரா போன்றோரின் லுக் அழகாக இல்லையா? என்ற விமர்சனமும் எழுகிறது. ஆரம்பகட்டத்தில் இருக்கும் நடிகைகள் மேக்கப் மேன்கள் பற்றி கவலைப்படுவதில்லை. வளர வளர முன்னணி ஹீரோயின்களாக தங்களை பாவித்துக்கொண்டு மும்பை மேக்கப் மேன் வேண்டும் என்கிறார்கள். சமீபத்தில் இப்படி கேட்பவர் அமலா பால்.
இதுமட்டுமில்லாமல் ஓட்டல் ரூம், வெளிநாட்டு ஷூட்டிங் போன்றவற்றுக்கும் அம்மா, அப்பா, உதவியாளர்கள், ஹேர்டிரஸ்சர், மேக்கப்மேனை அழைத்துவருதால் அனாவசியமாக பல லட்சம் ரூபாய் செலவாகிறது என்ற புகாரும் வைக்கப்படுகிறது.

''மும்பை நடிகை அவர். சென்னையில் ஷூட்டிங். நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சூட் ரூம் கேட்டார். பிறகு அம்மா, அப்பாவுக்கு ஒரு ரூம். மேக்கப் மேன், ஹேர்டிரஸ்சர், உதவியாளர் எல்லோருக்கும் தனி தனி ரூம் என்றார். இவ்வளவு ரூம் கொடுக்க முடியாது என்றதும், 'ஓ.கே' என்று நல்லப் பிள்ளையாகச் சொல்லிவிட்டார். மறுநாள் காலையில் ஷூட்டிங். வந்து சேர வேண்டிய ஹீரோயின் மாலை ஏழு மணிக்குத்தான் வந்தார். கேட்டால், 'மும்பையிலேயே லேட்டாகிவிட்டது, ஸாரி' என்று கூலாகச் சொன்னார். ஒரு நாள் ஷூட்டிங் நடக்காததால் தயாரிப்பாளருக்கான நஷ்டம் நான்கு லட்சம் ரூபாய். இந்த தொந்தரவுக்காகவே, 'போய் தொலையட்டும்' என்று சில தயாரிப்பாளர்கள் கொடுத்துவிடுகிறார்கள்" என்கிறார் மானேஜர் ஒருவர்.

தெலுங்கு படம் ஒன்றின் பாடல் காட்சி ஷூட்டிங். வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும். இலியானாவுக்கு பிசினஸ் கிளாஸ் விமான டிக்கெட். அவரது அம்மா, உதவியாளர், காஷ்டியூமர், ஹேர்டிரஸ்சர் எல்லாரும் வந்தால்தான் வருவேன் என்று இலியானா அடம் பிடிக்க, தெலுங்கு பட உலகில் பெரும் பிரச்னையாக வெடித்தது இது. இதுமட்டுமில்லாமல் வெளிநாட்டில் பர்சேஸ் என சென்றுவிட்டு அதற்கான பில்லையும் தயாரிப்பாளர் தலையில் கட்டும் நடிகைகளும் இருக்கிறார்கள்.

நடிகைகளை சொல்கிறீர்களே, ஹீரோக்கள் வாங்கவில்லையா என்றால், ''வாங்குகிறார்கள். ஆனால் நடிகைகள் வாங்கும் பேட்டாவில் கால்வாசிதானாம். அதையும் அவர்கள் வாங்குவதில்லை. அசிஸ்டென்டுகளே மானேஜர்களிடம் வாங்கிக்கொள்கிறார்கள்'' என்கிறார்கள். இதுமட்டுமல்லாமல் இப்போது மும்பையை போல புது டிரெண்ட் ஒன்றும் கோடம்பாக்கத்தில் உருவாகி இருக்கிறது. ஹீரோயின்களின் பாதுகாப்புக்கு பாடிகார்ட்டுகள் வர இருக்கிறார்களாம். இவர்களுக்கான சம்பளமும் தயாரிப்பாளர் தலையில் விழப்போகிறது என்பது அடுத்த ஷாக்.
 

Post a Comment