துப்பாக்கியில் முஸ்லிம்களை அவமதிக்கும் காட்சிகள் நீக்கம்... முருகதாஸ், தாணு, விஜய் பகிரங்க மன்னிப்பு

|

Ar Murugadass Thaanu Sac Apologise

சென்னை: 'துப்பாக்கி' படத்தில் முஸ்லிம்களை அவமதிக்கும் வகையில் இடம் பெற்றுள்ள காட்சிகளை நீக்கிவிடுவதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜயின் சார்பில் அவர் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

மேலும் இப்படிப்பட்ட காட்சிகள் இடம்பெற்றதற்கு முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக மூவரும் நேற்று அறிவித்துள்ளனர்.

நேற்று இரவு கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆகியோர் 24 முஸ்லீம் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பின்னர் மூவரும் நிருபர்களைச் சந்தித்தனர். அப்போது கூறுகையில், "‘துப்பாக்கி படம் யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்படவில்லை. அப்படி யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக வருந்துகிறோம். பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.

இஸ்லாமிய சகோதரர்கள் சொன்னதைக் கேட்டோம். உண்மையிலேயே மிகுந்த வேதனைக்குள்ளானோம். பிரச்சினைக்குரிய சில காட்சிகளை படத்திலிருந்து நீக்கிவிடுகிறோம். இந்தக் காட்சிகளை வேண்டுமென்றே நாங்கள் வைக்கவில்லை. தெரியாமல் இடம்பெற்று விட்ட இந்த காட்சிகளை நீக்குகிறோம்.

முஸ்லிம்கள் நமது தொப்புள்கொடி உறவுகள் என்பது கால காலமாக நிலவி வரும் சூழல். அதைக் காப்பாற்ற நாங்கள் உறுதுணையாக இருப்போம்," என்றனர்.

 

Post a Comment