கல்யாணத்தில ஆட்டோகிராப் போட்டேன்… பரோட்டா சூரி

|

Namma Veetu Kalyanam Barota Soori

எல்லோரும் கல்யாணத்தில மொய் எழுதிட்டு மணமக்களை வாழ்த்திட்டு போவாங்க. ஆனா எங்க ஊர்ல என் கிட்ட ஆட்டோகிராப் கேட்டாங்க என்று பெருமை பொங்க கூறினார் நகைச்சுவை நடிகர் ‘பரோட்டா' சூரி.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மறக்க முடியாத நிகழ்வு. திருமணநாளில் எடுக்கப்பட்ட போட்டோ, வீடியோ அவற்றை போட்டு பார்ப்பது சுவாரஸ்யமான விசயம். விஜய் டிவியில் பிரபலங்களின் வீட்டுத் திருமணங்களை நம்ம வீட்டுக் கல்யாணம் என்று ஒளிபரப்புகின்றனர். சம்பந்தப்பட்ட மணமக்களை நேரடியாக சந்தித்து திருமண நாளில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை கேட்டறிகின்றனர்.

நவம்பர் 4ம் தேதி ‘நம்ம வீட்டுக் கல்யாணம்' நிகழ்ச்சியில் ‘பரோட்டா' சூரியின் திருமண நிகழ்ச்சி ஒளிபரப்பானது. திருமண நாளில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை கூறிக்கொண்டே வந்தார்.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் நடைபெற்ற தனது திருமணம் தன்னை வெண்ணிலா கபடிக்குழு படத்தில் அறிமுகப்படுத்திய இயக்குநர் சுசீந்திரன் தலைமையில் நடைபெற்றது என்று கூறிய சூரி, தனது திருமணத்திற்காக உள்ளூர் பள்ளிக்கு விடுமுறை விட்டுவிட்டதாக கூறினார்.

திருமணத்திற்கு வந்த குழந்தைகள் அனைவரும் தன்னுடன் நின்று போட்டோ எடுத்துக் கொள்ள விரும்பிதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய ஆட்டோ கிராப் வாங்கிச் சென்றது மறக்கமுடியாத நிகழ்வு என்றார் சூரி.

பதினைந்து ஆண்டுகளாக சினிமாத்துறைக்கு வந்து சிரமப்பட்டது முதல் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் வாய்ப்பு கிடைத்தது வரை நேயர்களிடையே பகிர்ந்து கொண்டார் சூரி. முதல் படத்தின் நினைவாக தனது மகளுக்கும் வெண்ணிலா என்று பெயரிட்டுள்ளதாக கூறினார்.

 

Post a Comment