பாலச்சந்தரின் புதிய தொடர் ‘இலக்கணம் மாறுதோ?’

|

Kavithalaya New Serial Ilakkanam Marutho

கே.பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்துள்ள ‘இலக்கணம் மாறுதோ'. புதிய தொடர் வரும் திங்கட்கிழமை முதல் ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாக இருக்கிறது.

"இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ..." நிழல் நிஜமாகிறது என்ற படத்தில் வந்த பாடலின் வரியை கவிதாலயா நிறுவனத்தின் அடுத்த நெடுந்தொடரின் தொடரின் தலைப்பாக வைத்திருக்கிறார்கள்.

பாலசந்தரின் இயக்கமோ, தயாரிப்போ கதைக்களம் வித்தியாசமாகத்தான் இருக்கும். இந்த தொடரும் அதுபோலத்தான் என்பதை பெயரை வைத்தே புரிந்து கொள்ளலாம்.

ஸ்ரேயா, சுரபி இருவரும் பள்ளிப்பருவத்தில் இருந்தே உயிர்த் தோழிகள். இருவருக்கும் உரிய காலத்தில் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. வாசுவுக்கு சுரபி என்றும், சிவாவுக்கு ஸ்ரேயா என்றும் இவர்களின் பெற்றோர் நிச்சயிக்கிறார்கள். திருமணத்திற்கு முன் 3 மாத இடைவெளி இருக்க, நால்வரும் ஜோடியாக பழகுகிறார்கள். அப்பழக்கத்தின் பயனாக, நால்வரும் தத்தம் விருப்பு, வெறுப்புகளை நன்கு புரிந்து கொள்கிறார்கள். தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை விட அடுத்தவனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் உகந்தவள் என்ற உண்மையை மெல்ல உணரத் தலைப்படுகின்றனர். இதை தோழிகள் இருவரும் கூட உணர்ந்து ஒப்புக்கொள்கின்றனர். அவர்கள் முன் எழும் கேள்விகள் இப்போது இது தான்.

பெற்றோர் நிச்சயித்த மாப்பிள்ளையை மணப்பதா? அல்லது தத்தம் ரசனைக்கு ஒத்து வருகின்ற குண நலன்களை கொண்ட தனக்கேற்ற மற்றவரை ஏற்பதா? என்று யோசிக்கின்றனர். இறுதியில் நால்வரும் இரண்டாவது முடிவை ஒரு மனதாக தேர்ந்தெடுக்க, சிக்கல் உருவாகிறது. இவர்கள் வாழ்வு இவர்கள் முடிவிற்கேற்ப மகிழ்ச்சியாக அமையுமா? என்பதை சுவாரஸ்யத்துடன் கொண்டு செல்கின்றனர்.

இதில் ‘சஹானா' புகழ் காவ்யா, ஐஸ்வர்யா, விஜய், விக்கி, விஜய் ஆனந்த், கவிதாலயா கிருஷ்ணன், ‘அச்சமில்லை' கோபி, சாந்தி வில்லியம்ஸ், உஷா, லலிதா, விசேஷ், ஸ்வேதா, ஸ்ரீவித்யா, லட்சுமி நடிக்கின்றனர். முக்கியமான கதாபாத்திரத்தில் பிரமோதினி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகும் இந்த தொடரை புஷ்பா கந்தசுவாமி தயாரிக்க, வெங்கட் இயக்குகிறார்.

 

Post a Comment