பாட்னா: இந்து கடவுளான ராதாவை அவமதித்ததாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான், அவரது மனைவி கௌரி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய பீகார் மாநில நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலிவுட் இயக்குனர் கரன் ஜோஹார் இயக்கி வெளிவந்த படம் ஸ்டூடண்ட் ஆப் தி இயர். இதை நடிகர் ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், தர்மா புரொடக்ஷனும் சேர்ந்து தயாரித்தன. இந்த படத்தில் வரும் ஒரு பாடலில் இந்து கடவுளான ராதாவை அவமதித்துள்ளதாகவும், அதனால் படத்தின் நடிகர்கள், இயக்குனர், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அவரது மனுவை விசாரித்த நீதிபதி இந்து கடவுளை அவமதித்த குற்றத்திற்காக தி ஸ்டூடண்ட் ஆப் தி இயர் படத்தில் நடித்த நடிகர்கள் வருண் தவான், ஆலியா பட், சித்தார்த் மல்ஹோத்ரா, இயக்குனர் கரண் ஜோஹார், தயாரிப்பாளர்கள் ஷாருக்கான் கான் அவரது மனைவி கௌரி கான் மற்றும் தர்மா புரொடக்ஷன் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு சாதார் போலீசாருக்கு உத்தரவிட்டார்.