சென்னை: வன யுத்தம் திரைப்படத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பாக வீரப்பன் மனைவி முத்துலட்சுமி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு வன யுத்தம் என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி சென்னை மாநகர சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், தனது கணவர் பற்றிய வழக்குகள் இன்னும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் அவரை பற்றி பொய்யான தகவல்களுடன் வெளிவரும் இதுபோன்ற படங்கள் சட்டத்துக்கு புறம்பானவையாகும். எனவே எனது கணவரை காட்டுக் கொள்ளையன்போல சித்தரித்து எடுக்கப்பட்டுள்ள வன யுத்தம் படத்தை தடை செய்யவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த சிவில் நீதிமன்றம் வனயுத்தம் திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து கடந்த செப்டம்பர் 26-ம் தேதி உத்தரவிட்டது. இந்தத் தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி படத்தை தயாரித்த அக்சயா கிரியேஷன்ஸ் நிறுவனம் மற்றும் படத்தின் இயக்குநர் ஏ.எம்.ஆர். ரமேஷ் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி ஆர்.எஸ். ராமநாதன் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடர்பாக முத்துலட்சுமி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், சர்ச்சைக்கு ஆளாகியுள்ள படக் காட்சிகள் குறித்த பட்டியலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை நவம்பர் 15-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
Post a Comment