துப்பாக்கி தள்ளிப் போனதால் கோபத்தில் வெளிநாட்டு விநியோகஸ்தர்கள்!

|

Overseas Distributors Slammed Tuppakki Producer   

இன்று வெளியாகவிருந்த துப்பாக்கி படம், மர்மமான காரணங்களால் 13-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டதால் பெரும் நஷ்டத்துக்குள்ளாகியுள்ளதாக கோபத்துடன் புலம்பிக் கொண்டிருக்கின்றனர் வெளிநாட்டு விநியோகஸ்தர்கள்.

விஜய்யின் துப்பாக்கி படம் தீபாவளிக்கு நான்கு நாட்கள் முன்னதாக, அதாவது இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, விளம்பரங்களும் வெளியிடப்பட்டன.

ஆனால் கடைசி நேரத்தில் இசையமைப்பாளர் பிரச்சினை, இயக்குநர் - ஹீரோ லடாய் என சில பல காரணங்களால் நான்கு தினங்கள் தள்ளிப் போய்விட்டது படம்.
செவ்வாய்க்கிழமைதான் ரிலீஸ் தேதி மாற்றியதை அறிவித்துள்ளனர்.

இதில் உள்ளூர்க்காரர்கள் சுதாரித்துக் கொண்டார்கள். ஆனால் வெளிநாடுகளில் இவர்களை நம்பி திரையரங்குகளை புக் பண்ண விநியோகஸ்தர்கள், அவர்களை நம்பி டிக்கெட் விற்ற தியேட்டர்காரர்கள் பெரும் சிக்கலுக்குள்ளாகிவிட்டனர். பல லட்சத்தை இழக்க வேண்டிவந்துள்ளது.

மொத்தம் 50000 டிக்கெட்டுகள் வரை விற்றுள்ளனர். ஆனால் படம் தள்ளிப் போனதால் மிகுந்த சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளனர் அந்த விநியோகஸ்தர்கள். ரசிகர்களுக்கு பணம் திருப்பித் தந்தனர். சில இடங்களில் 13-ம் தேதிக்கு டிக்கெட்டை மாற்றித் தந்தனர்.

ஆனால் புக் பண்ண தியேட்டர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிவிட்டார்களாம்.

ஐரோப்பாவில் இந்தப் படம் 12 நாடுகளில் வெளியாகவிருந்தது இந்தப் படம். அங்கெல்லாம் 9-ம் தேதிக்கு பெரிய அரங்குகளை புக் பண்ணியிருந்தார்களாம். ஜேம்ஸ்பாண்ட் படத்துக்கு கொடுக்கவிருந்த அரங்கைக்கூட பிடிவாதமாக துப்பாக்கி படத்துக்காக கேட்டு வாங்கினார்களாம்.

நார்வேயில் மட்டும் 6 நகரங்களில் இந்தப் படத்தை திரையிட இருந்துள்ளார் விஎன் மியூசிக் ட்ரீம்ஸ் சார்பில் இந்தப் படத்தை வெளியிடும் வசீகரன். ஆனால் இப்போது அனைத்தையும் கேன்சல் செய்துள்ளார். இதில் அவருக்கு பெரிய நஷ்டமாம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "ஐரோப்பாவில் துப்பாக்கி படம் பெரிய அளவில் வெளியாகவிருந்தது. ஆனால் தேதியை மாற்றி குழப்பிவிட்டதால் எங்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

லண்டனில் மட்டும் 25 தியேட்டர்களில், 300 ஷோக்கள் கேன்சலாகிவிட்டன. சுவிஸ்ஸில் 7 தியேட்டர்களில் 40 ஷோக்கள் கேன்சலாகிவிட்டன. ஜெர்மனியில் 6 அரங்குகளில் 30 ஷோக்களும், நார்வேயில் 7 அரங்குகளில் 15 காட்சிகளும், ஹாலந்தில் 2 தியேட்டர்களில் 7 ஷோக்களும், இத்தாலியில் 2 தியேட்டர்களில் 6 ஷோக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால் நான் உள்ளிட்ட பிறநாட்டு விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் கொஞ்சமல்ல.

கடைசி நேரத்தில் படங்களை ரத்து செய்வது இது முதல்முறையல்ல. குறிப்பாக ஜெமினி நிறுவனம் தயாரிக்கும் அல்லது வெளியிடும் படங்களுக்கு இது அடிக்கடி நேர்கிறது. அப்படி தள்ளிப்போடுவதையாவது முறைப்படி முன்கூட்டியே அறிவிப்பதும் இல்லை. நாங்கள் தொடர்பு கொண்டாலோ போனைக் கூட எடுப்பதில்லை.

இது மிகவும் துரதிருஷ்டவசமானது, தமிழ் சினிமா மீதான நம்பகத்தன்மை மீது விழுந்த அடி. இனி நிச்சயம், பெரிய பட்ஜெட் படம் குறித்த தேதியில் ரிலீசாகிறதென்றால், வெளிநாட்டு ரசிகர்கள் அதை நம்ப மாட்டார்கள். படம் ரிலீசான பிறகுதான் வருவார்கள்.

தமிழகத்தில் எப்படியோ, இங்கு வெளிநாட்டுக்கு படங்களை அனுப்பும்போது, குறைந்தது மூன்று தினங்களுக்கு முன்பே சம்பந்தப்பட்ட படத்தின் ஹார்ட் டிஸ்க் மற்றும் கீயை அனுப்பி வைக்க வேண்டும். அப்போதுதான் நாங்கள் சரியான நேரத்தில் வெளியிட முடியும்.

ஹாலிவுட் படங்கள் மாதிரி சொன்ன தேதிக்கு சரியாக படத்தை வெளியிட தமிழ் சினிமாக்காரர்கள் எப்போது கற்றுக் கொள்வார்களோ தெரியவில்லை," என்றார்.

 

+ comments + 1 comments

Anonymous
9 November 2012 at 18:25

summa edhavadhu pulugadhinga da

Post a Comment