'பரதேசி' படத்தை பாலா திரையிட்டு காண்பித்தார். பார்த்து முடித்ததும் அதிர்வு ஏற்பட்டது. தமிழ் சினிமாவில் இது முக்கியமான படம். யாரும் தவற விட்டுவிடக் கூடாது. பஞ்சம் பிழைக்கச் செல்லும் ஒரு கூட்டத்தின் வாழ்க்கை, இதில் பிம்பப்படுத்தப்பட்டு உள்ளது. எப்போதுமே பாலா தன் படங்களில், மனிதனின் மறுபக்கத்தைப் பார்க்க ஆசைப்படுவார். இந்தப் படத்திலும் அவர் மிகச் சிறந்த பதிவை வெளிப்படுத்தி இருக்கிறார். நீரோட்டத்துடன் ஓடுவது செத்த மீன். நீரோட்டத்தை எதிர்த்து ஓடுவது உயிருள்ள மீன். அப்படியொரு உயிருள்ள மீன்தான் பாலா. அவரது படத்துக்கு பாடல் எழுதியது வித்தியாசமான அனுபவம். அதர்வா சிறப்பாக நடித்துள்ளார்.
1940,களில் நடக்கும் கதை இது. வைகை அணை கட்டும்போது, 14 கிராமங்கள் காலி செய்யப்பட்டன. சொந்த ஊரை விட்டு வெளியேறிய அந்த ஐந்து வயது சிறுவன்தான், இன்று உங்கள் முன் பேசிக் கொண்டிருக்கும் வைரமுத்து. எனவே, பஞ்சம் பிழைக்கப் போகும் கூட்டத்தைப் பற்றிய வலி எனக்கு தெரியும். வாழ்க்கையில் நான் பெற்ற அனுபவங்கள்தான் எழுத்துகளாக வருகின்றன.
இதுவரை நான் எழுதிய பாடல் வரிகளை மாற்றாத ஒரே இயக்குனர் பாரதிராஜா மட்டுமே. இந்தப் படத்துக்கு நான் எழுதிய ஒரு பாடலில், ஒரு வரியை மாற்ற வேண்டும் என்று பாலா கேட்டபோது, நன்றாக இருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள் என்றேன். இன்னொரு பாடலில் ஒரு வரியை அவர் மாற்றியபோது, நான் சொல்ல வந்த கருத்து மாறிவிடும் என்று விளக்கினேன். புரிந்துகொண்ட அவர், நான் எழுதிக் கொடுத்ததையே பயன்படுத்தினார். அதுதான் பாலா.
இவ்வாறு வைரமுத்து பேசினார். விழாவில், பாலுமகேந்திரா, கங்கை அமரன், வேதிகா, தன்ஷிகா, ஜி.வி.பிரகாஷ் குமார் உட்பட பலர் பேசினர்.
Post a Comment