சமையல் நிகழ்ச்சி என்றாலே ஸ்டுடியோவுக்குள் மட்டும்தான் என்ற நிலையை மாற்றி அமைத்தவர் செஃக் ஜேக்கப். சன் டிவியில் சனிக்கிழமை ஒரு மணி ஆகிவிட்டாலே போதும் ‘ஆகா என்ன ருசி' நிகழ்ச்சியைக் காண டிவி முன்பாக கூடிவிடுவார்கள் இல்லத்தரசிகள். ஜேக்கப் செய்யும் சமையலுக்கு ரசிகர்கள் அதிகம்.
இந்தவாரம் சனிக்கிழமை வாணியம்பாடி கோவிலில் சிவனுக்கு காப்பரிசி செய்து படைத்தார் ஜேக்கப். பவுர்ணமி தினத்தன்று அந்த கோவிலில் அன்னாபிஷேகம் செய்தார்கள். சிவனுக்கு தன் கைகளால் அபிசேகம் செய்து சுவையான நைவேத்தியம் செய்து படைத்தார் ஜேக்கப்.
இதனையடுத்து உடலுக்குச் சத்தான முட்டைக்கோஸ் சாதம் செய்து காண்பித்தார். முட்டைக்கோஸ் குறித்து டாக்டரின் ஆலோசனை வேறு இந்த நிகழ்ச்சியில் இடம் பெற்றது.
இதயநோய், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகியவற்றை முட்டைக்கோஸ் கட்டுப்படுத்துவதாக கூறினார். இது உடல்பருமனை குறைக்கும் என்றும் டாக்டர் கூறினார்.
சமையல் நிகழ்ச்சியில் முதன் முதலாக குழந்தைகளையும் ஆர்வத்துடன் பங்கேற்கச் செய்தவர் ஜேக்கப். சமையல் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக மாற்றியதில் ஜேக்கப்பிற்கு தனி பங்குண்டு. சூப்பர் செஃப் ஜூனியர் பகுதியில் குழந்தைகளின் ரசனைகளை வெளிக்கொணர்ந்து அறியச் செய்தவர்.
சமையல் பற்றி பல்வேறு நூல்களை எழுதியுள்ள ஜேக்கப் சகாயகுமார் ஞாயிறன்று மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார் என்பதை சமையல் நிகழ்ச்சி ரசிகர்களாலும், சுவைஞர்களாலும் நம்பத்தான் முடியவில்லை.
நிகழ்ச்சியின் முடிவில் அடுத்தவாரம் தீபாவளி ஸ்பெசல் எபிசோட் என்று கூறினார் ஜேக்கப். நாங்கல்லாம் பார்ப்போம், நீங்க எங்க இருப்பீங்க ஜேக்கப்? ஜேக்கப்பிற்குத் தெரியுமா என்ன இதுதான் தன்னுடைய கடைசி நிகழ்ச்சி என்று?.
ஜேக்கப் நேற்று சென்னையில் உள்ள தனது இல்லத்தில் திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 38. மிகவும் இளம் வயதிலேயே பிரபலமான சமையல் கலைஞராக உருவெடுத்த அவர் கின்னஸ் சாதனையும் படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment