நீர்ப்பறவை படத்திற்காக எழுதப்பட்ட சர்ச்சைக்குரிய பாடலிலிருந்து மேலும் சில வரிகளை நீக்கியுள்ளார் கவிஞர் வைரமுத்து. இதையடுத்து படப் பாடலுக்குக் கிளம்பிய சிக்கல் தீர்ந்துள்ளது. படமும் திட்டமிட்டபடி நவம்பர் 30ம் தேதி வெளியாகவுள்ளது.
சீனு ராமசாமியின் இயக்கத்தில் விஷ்ணு, சுனைனா நடித்திருக்கும் படம் ‘நீர்ப்பறவை'. இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில் கிறித்தவர்களை அவமதிக்கும் கருத்துக்கள் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. வைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தப்போவதாகவும் கிறித்தவ மதத்தவர்கள் அறிவித்தனர்.
இதனால் குறிப்பிட்டபடி நவம்பர் 30ம் தேதி திரைப்படம் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சர்ச்சைக்குரிய வரிகளை பாடலாசிரியர் வைரமுத்து மாற்றியுள்ளார்.
முதலில்
உன் பெயரை ஸ்தோத்திரம் செய்தேன்
சத்தியமும் ஜீவனுமாய் நிலைக்கிறாய் என்ற வரிகளை மாற்றினர். அதற்குப் பதில்,
என் பெயரும் ஞாபகம் இல்லை
சத்தியமாய் என்னருகே நீ இருக்கிறாய் என்று மாற்றப்பட்டது.
தற்போது அதே பாடலில் மேலும் சில வரிகளை மாற்றி விட்டனர்.
கிச்சு கிச்சு பண்ணும் கிறிஸ்துவப் பெண்ணே
பச்சை முத்தம் தர மனமில்லையா?
ஒரு கன்னம் தர மறு கன்னம் காட்டு
திருமுறை வரி நினைவில்லையா?
என்ற வரிகளுக்குப் பதிலாக
கிச்சு கிச்சு பண்ணும் கிளிவண்ணப் பெண்ணே
பச்சை முத்தம் தர மனமில்லையா?
இரு இருதயம் நெருங்கிய
பின்னே இதழுக்கு என்ன இடைவெளியா? என்று மாற்றியுள்ளனர்.
மேலும், கன்னித்தாய் என்ற வார்த்தைக்குப் பதில், காதல்தாய் என்ற வரியை பயன்படுத்தியுள்ளார் வைரமுத்து.
Post a Comment