மும்பை: தூக்கத்தில் நடக்கும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமீரா ரெட்டி இதற்கான சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்துக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகை சமீரா ரெட்டிக்கு குழந்தை பருவத்திலிருந்தே ‘சோம்னாம்புலிசம்' என்ற தூக்கத்தில் நடக்கும் பாதிப்பு உள்ளது. இதனால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வரும் அவர் பல்வேறு சிகிச்சைகள் பெற்றும் நிவாரணம் கிடைக்கவில்லை. இதனையடுத்து சிகிச்சைக்காக அவர் சுவிட்சர்லாந்து செல்ல திட்டமிட்டுள்ளார்.
சுவிஸ் செல்லும் முன்பாக கிரீஸ் நாட்டில் வசித்து வரும் தனது சகோதரி மேகனாவை பார்க்க செல்கிறார். மேகனா கர்ப்பமாக இருப்பதால் அவரது பிறக்கப் போகும் குழந்தைக்கு துபாயில் சில விளையாட்டுப்பொருட்களை வாங்கிக் கொண்டு கிரீஸ் செல்கிறார் சமீரா. இதன் பின்னர் அடுத்த சில வாரங்களில் சுவிட்சர்லாந்து நாட்டில் சிகிச்சை பெறுவதற்கு திட்டமிட்டுள்ளார்.
ஐரோப்பா பயணம் குறித்து நடிகை சமீரா ரெட்டியிடம் கேட்டதற்கு, தூக்கத்தில் நடக்கும் நோய்க்கு சிகிச்சை பெற சுவிட்சர்லாந்து செல்ல போவது உண்மைதான் என்று கூறியுள்ளார்.
‘வாரணம் ஆயிரம்' படத்தில் அறிமுகமான சமீரா ரெட்டி, தமிழில் அசல், வெடி, வேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தியில் ‘மைனே தில் துஜ்கோ தியா' என்ற படத்தில் அறிமுகமான சமீரா இதனைத் தொடர்ந்து ‘நோ என்ட்ரி', ‘ரேஸ்'' ‘ஒன் டூ திரி' உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.