பவுர்ணமி நாளில் பைத்தியம் பிடிக்கும்னு சொல்றாங்க... அது உண்மையா? ஏன் அப்படி சொல்றாங்க? மூன்... ஹனிமூன்... என்ன தொடர்பு என்று பல சுவாரஸ்யமான தகவல்களை சொன்னார் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.
சன் டிவியில் தினமும் காலை ஒளிபரப்பாகும் சூரிய வணக்கம் நிகழ்ச்சியில் தினமும் ஒரு சுவாரஸ்யமான தகவல்களை கூறி காலை நேரத்தில் உற்சாகப்படுத்துகிறார் வெண்ணிற ஆடை மூர்த்தி.
புதிதாக திருமணமான தம்பதிகள் ஏன் ஹனிமூன் போறாங்க என்று ஆரம்பித்து பவுர்ணமி நாளில் சிலருக்கு ஏன் மூளையில் பிரச்சினை ஏற்படுகிறது என்பது வரை சுவாரஸ்யமான தகவல்களை சொன்னார்.
ஹனிமூன்தான் மொழி மாற்றத்தில் தேன் நிலவாக மாறிவிட்டது. திருமணமான புதிய தம்பதிகள் எந்த தொந்தரவும் இல்லாமல் இருக்கவேண்டும் என்பதற்காக மலைவாசஸ்தலங்களுக்கு செல்வதை பண்டைய காலத்தில் இருந்தே கடைபிடித்து வந்தனராம்.
நிலவுக்கும் நீருக்கும் தொடர்பு இருப்பதனால்தான் முழுநிலவு நாளில் கடல் அலைகள் மேல் எழும்புகின்றன. ஆறு, அருவி, ஏரிகளில் நீர் நிலைகளில் மாற்றம் ஏற்படுகின்றன என்றும் கூறினார் வெண்ணிற ஆடை மூர்த்தி.
பவுர்ணமி நாளில் சிலர் பித்துப் பிடித்தது போல் இருப்பார்கள். இதற்கு காரணம் முழுநிலவு நாளில் ஏற்படும் மாற்றம் என்று அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.
இதனை லுனாசி என்று கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாட்டில் கூறியுள்ளார். ரோமானியர்கள் சந்திரனை கடவுளாக வணங்கினார்கள். லூனார் என்ற வார்த்தையில் இருந்துதான் லுனாசி தோன்றியது. மனித உடலில் நீர் காணப்படுவதால் சந்திரனில் ஏற்படும் மாற்றம் மனித மூளையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்றும் அரிஸ்டாட்டில் கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால் பவுர்ணமி நாளில் பித்துப் பிடிப்பது குறித்து எந்த அறிவியல் அறிஞர்களும் நிரூபிக்கவில்லை. இது மனரீதியான பிரச்சினைதான் என்றும் கூறி தகவலை நிறைவு செய்தார் வெண்ணிற ஆடை மூர்த்தி.
எனவே பவுர்ணமி நாளில் நமக்குப் பைத்தியம் பிடிக்கும், பித்துப் பிடிக்கும் என்று யாரும் தேவையில்லாமல் மனதைப் போட்டு அலட்டிக் கொள்ளாமல், அந்த நாட்களில் மனதை இயல்பாக வைத்து, வழக்கம்போல செயல்பட முயற்சிக்க வேண்டும். மேலும் அந்த நாளைப் பற்றிக் கவலையே படாமல் மனதை திசை திருப்பும் வகையில், கூடுதல் உற்சாகத்துடன் செயல்பட முயற்சித்தாலே போதும்... எல்லாமே ஓடிப் போய் விடும். கீப் கூல்...
Post a Comment