புயலால் சென்னையே பீதியில் ஆழ்ந்தபோது உற்சாகமாக வரவேற்ற மணிரத்தினம்!

|

Manirathinam Shoots Cyclone Nilam For His Movie

சென்னை: நிலம் புயலால் சென்னை மாநகரமே பெரும் பீதியில் இருந்தபோது ஒரே ஒரு குரூப் மட்டும் உற்சாகமாகவும், சந்தோஷமாகவும் இருந்துள்ளது. அவர்கள் வேறு யாருமல்ல, இயக்குநர் மணிரத்தினம், கேமராமேன் ராஜீவ் மேனன் ஆகியோர் அடங்கிய கடல் படக் குழுவினர்.

நிலம் புயலால் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பையும், கடல் சீற்றத்தையும், பலத்த சூறாவளிக் காற்றையும் இவர்கள் படம் பிடித்துள்ளனர் தங்களது படல் படத்துக்காக.

நிலம் புயல் தமிழக கடற்கரைப் பகுதியைத் தாக்கி கரையைக் கடந்த சமயத்தில் மணிரத்தினம், ராஜீவ்மேனன் உள்ளிட்டோர் ராயபுரம், காசிமேடு ஆகிய பகுதிகளில் முகாமிட்டிருந்தனர். புயலின் கோரக் காட்சிகளை தத்ரூபமாக படம் பிடிப்பதே இவர்களது நோக்கம். இருப்பினும் புயல் இவர்கள் இருந்த பக்கம் வராமல் மகாபலிபுரத்தோடு நின்று விட்டது. இருப்பினும் கடல் கொந்தளிப்பையும், சீற்றத்தையும், சூறைக் காற்றையும் இவர்கள் படம் பிடித்துள்ளனர்.

இந்த சமாச்சாரத்தை இப்படத்தில் வில்லனாக நடிக்கும் அரவிந்த் சாமி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். புயல் சீற்றத்துக்கு மத்தியில் சில காட்சிகளைப் படம் பிடித்தோம். அது புதிய அனுபவமாக இருந்தது என்று கூறியுள்ளார் அரவிந்த்சாமி.

புயல் பலருக்கு வாழ்க்கையைக் கெடுக்கிறது, சிலருக்கு வாழ்க்கையை புதுவிதமாக அனுபவிக்க சொல்கிறது...!

 

Post a Comment