சோனா மீது ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு

|

Pmk Lawyer Files Defamation Case On Sona   

வேலூர்: ராணிப்பேட்டை உரிமையியல் நீதிமன்றத்தில் நடிகை சோனா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை முத்துக்கடையை சேர்ந்த பாமக வக்கீல் ஜானகிராமன் என்பவர் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

ஆண்களை இழிவாக பேசியதாக திரைப்பட நடிகை சோனா மீது அவர் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "ஆண்கள் எனக்கு டிஷ்யூ பேப்பர்தான் எனும் தலைப்பில் வந்துள்ள நடிகை சோனா பேட்டியானது ஆண் இனத்தை இழிவுபடுத்தும் விதமாகவும், கேவலப்படுத்தும் விதமாகவும், ஆபாசமாக, அருவருக்கதக்கதாகவும் அமைந்துள்ளது.

ஆண்களுடன் சேர்ந்து வாழ்வதும், திருமணம் செய்து கொள்வதும் முட்டாள்தனம் என புனிதமான திருமண பந்தத்தை கொச்சைப்படுத்தி பேட்டியளித்துள்ளார்.

தமிழ் பண்பாட்டிற்கும், கலாசாரத்திற்கும், நாகரீகத்திற்கும் முன் உதாரணமாக திகழும் தமிழ்நாட்டில் இதுபோன்ற கருத்துகளால் பண்பாடு, கலாசாரம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆண்கள் மீது பெண்களுக்கு மதிப்பும், மரியாதையும் குறைய வாய்ப்புள்ளது. ஒட்டு மொத்த ஆண் இனத்தையும் உள்நோக்கம் கொண்டு அவதூறாக பேசியுள்ளார்.

நடிகை சோனா சினிமா துறையில் பிரபலமானவர் என்பதால் இந்த கருத்துகள் பெண்கள் மத்தியில் எளிதில் செல்ல வாய்ப்புள்ளது. பின் விளைவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளளது.

எனவே நடிகை சோனா மீது குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 200-ன்கீழ் கோப்பில் எடுத்துக்கொண்டு நடிகை சோனாவிற்கு சம்மன் அனுப்பி இந்திய தண்டனை சட்டப்பிரிவு 292 (1) (2), 293, 294, 499, 500, -ன்கீழ் வழக்கை விசாரித்து தகுந்த நீதி வழங்க கேட்டுக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Post a Comment