சென்னை: ஆண்களை துடைத்துப் போடும் டிஷூ பேப்பருடன் ஒப்பிட்டுப் பேட்டி கொடுத்ததாக சர்ச்சையில் சிக்கியுள்ள கவர்ச்சி நடிகை சோனா மீது தமிழ்நாடு ஆண்கள் நலச் சங்கம் சார்பில் சென்னை எழும்பூர் கோர்ட்டில் வழக்குப் போடப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஒரு வாரப் பத்திரிக்கையில் வெளியான சோனாவின் பேட்டி பெரும் புயலைக் கிளப்பி விட்டது. அதில் ஆண்களை டிஷூ பேப்பருடன் சோனா ஒப்பிட்டுக் கூறியதாக வெளியாகியிருந்ததால் ஆண்கள் நலச் சங்கத்தில் போராட்டத்தில் குதித்தனர். சோனா வீடு முன்பு போராட்டமும் நடத்தப்பட்டது. ஆனால் தான் அப்படியெல்லாம் பேசவில்லை என்றும் அந்தப் பத்திரிகைதான் திரித்து போட்டு விட்டதாகவும் கூறினார் சோனா. மன்னிப்பும் கேட்க மறுத்து விட்டார்.
இந்தப் பின்னணியில், ஆண்கள் பாதுகாப்புச் சங்க பொதுச் செயலாளர் மதுசூதனன் என்பவர் சென்னை எழும்பூர் 13-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குப் போட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், நடிகை சோனா ஆண்களைப் பற்றி தெரிவித்துள்ள கருத்து அவதூறானது. ஆண்களின் சுயமரியாதைக்கு எதிரானது. பண்பாடு மிக்க சமுதாயத்தை சீரழிக்கும் வகையில் பேசி உள்ளார். குடும்ப வாழ்க்கையை பற்றியும் கொச்சைப்படுத்தி இருக்கிறார்.
சுயமரியாதைக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் நடிகை சோனா மீது சட்டப்பிரிவுகள் 500, 504, 505 ஆகியவற்றின் கீழ் தண்டனை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
ஏற்கனவே சோனா மீது வேறு ஒரு ஊரிலும் வழக்குப் போட்டுள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.
Post a Comment