சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், சன் டிவி அதிபருமான கலாநிதி மாறன் மீது இயக்குனர் சக்தி சிதம்பரம் ரூ.10 கோடி மோசடி புகார் கொடுத்துள்ளார்.
திரைப்பட இயக்குனர் சக்தி சிதம்பரம் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
நடிகர் விஜய் கதாநாயகனாக நடித்த காவலன் திரைப்படத்தின் தமிழ்நாடு உரிமையை நான் பெற்றேன். அதில் செங்கல்பட்டு ஏரியா உரிமையை சன் குழுமத்தினர் வாங்கினர். இந்த வகையில் சன் குழுமத்தினர் எனக்கு தர வேண்டிய ஆறே முக்கால் கோடி ரூபாயை தர வேண்டும். ஆனால் தரவில்லை.
உரிமம் பெற்ற வகையில் எனக்கு சன் குழுமத்தினர் ஆறே முக்கால் கோடி ரூபாய் தர வேண்டும். வட்டியுடன் சேர்த்து ரூ.10 கோடி தர வேண்டும். அவர்களால் எனது தொழில்கள் அனைத்தும் முடங்கிப் போய்விட்டன.
இதற்கு காரணமான சன் குழுமத்தைச் சேர்ந்த கலாநிதிமாறன், கண்ணன், ஆர்.எம்.ரமேஷ், செந்தில் ஆகியோர் மீது காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சன் குழுமம் திரைப்படத் துறையின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளது. இவர்களால் ஏராளமான தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சன் தொலைக்காட்சிக்கு மட்டும் உரிமம் பெற்றுவிட்டு அவர்களது அனைத்து மொழி தொலைக்காட்சிகளிலும் என் படத்தை ஒளிபரப்பி வருகின்றனர் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
Post a Comment