விஸ்வரூபத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் இல்லாவிட்டால் 10000 பேருக்கு பிரியாணி- முஸ்லிம் லீக்

|

Viswaroopam Row Muslim League Accepts   

சென்னை: விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களுக்கு எதிராகக் காட்சிகள் இல்லாவிட்டால் 10000 ஏழை சகோதரர்களுக்கு பிரியாணி விருந்து அளிக்க தயார் என்று தேசிய முஸ்லிம் லீக் அறிவித்துள்ளது.

விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களை தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறி, அப்படத்துக்கு சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

இந்த நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்த கமல், படத்தை பார்த்த பிறகு மனம் மாறி என்னை சந்தேகப்பட்டதற்கு பிராயசித்தமாக பசித்த பிள்ளைகளுக்கு முஸ்லிம் சகோதரர்கள் பிரியாணி வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்து இந்திய தேசிய முஸ்லிம் லீக் தலைவர் ஜவஹிர்அலி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சகோதரர் கமலஹாசன் தயாரித்து நடித்து வெளிவரும் 'விஸ்வரூபம்' படத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான காட்சிகளும் வசனங்களும் உள்ளதாக செய்திகள் வெளிவர தொடங்கியுள்ள நிலையில் கமலஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் முஸ்லிம்கள் இப்படத்தைப் பார்த்து மனம் மாறி தேவையில்லாமல் சந்தேகப்பட்டு விட்டோமே என்று மனதில் வருதப்படுவார்கள் என கூறியுள்ளார்.

'ஹேராம்' மற்றும் 'உன்னைப்போல் ஒருவன்' படம் வெளிவந்தபோதும் இப்படியே கூறினார். ஆனால் அத் திரைப்படங்களில் இஸ்லாமியர்களை காயப்படுத்தும் வகையில் வசனங்களும் காட்சிகளும் அமைந்திருந்தது. ஆனால் அச்சமயம் எங்களுக்குள் வலுவான ஒற்றுமை இல்லாததினால் பெரிய அளவில் எங்களின் எதிர்ப்புகளை காட்டவில்லை.

ஆனால் இன்று முஸ்லிம் சமூகத்துக்குள் மிகப் பெரிய வலுவான ஒற்றுமையும் உணர்வும் வந்திருப்பதால் முஸ்லிம்களை காயப்படுத்தும் வசனங்களோ, காட்சிகளோ எந்த திரைப்படத்தில் இடம் பெற்றாலும் அதை எதிர்க்க தயங்க மாட்டோம்.

'விஸ்வரூபம்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகள் இல்லாமல் இருந்தால் சகோதரர் கமலஹாசன் கூறுவதுபோல் அவர் முன்னிலையில் ஏழைகள் 10 ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்க இந்திய தேசிய முஸ்லீம் லீக் தயாராக உள்ளது," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Post a Comment