'பாட்ஷாவும் நானும்' புத்தகத்தில் பாபாவை மறந்த சுரேஷ் கிருஷ்ணா!

|

Director Suresh Krishna Forgets Bab   

தமிழ் சினிமாவில் என்றைக்குமே தன் தோல்விப் படங்களை தவறிப் போய்க்கூட குறிப்பிடுவதில்லை இயக்குநர்கள் அல்லது நடிகர்கள்.

இவர்கள் வரிசையில் சேர்ந்திருப்பவர் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா. பெரிய இயக்குநர் என்று பெயரெடுத்தும், வெற்றி - தோல்வியை மறைக்க முயலாத ரஜினியுடன் பழகியும் கூட, ரஜினி ரசிகர்களுக்கு ஒரு சங்கடத்தை உருவாக்கியிருக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா தனது பாட்ஷாவும் நானும் புத்தகம் மூலம்.

ரஜினியை வைத்து தான் இயக்கிய ப்ளாக்பஸ்டர் படமான பாட்ஷாவின் பெயரை புத்தகத்தின் தலைப்புக்குப் பயன்படுத்தியுள்ள சுரேஷ் கிருஷ்ணா, அந்தப் புத்தகத்தின் முன்னுரையில் தான் இயக்கிய மற்றொரு முக்கிய படமான பாபா பற்றி குறிப்பிடவே இல்லை.

அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் இயக்குநர் என்றுதான் அதில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார். அந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளப் போவதாக மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.

ரஜினியை வைத்து சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய மற்றொரு முக்கிய படம் பாபா. அந்தப் படம் அன்றைய காலகட்டத்தில் மிகப் பரபரப்பாக பேசப்பட்டது. இன்றும் ரஜினி ரசிகர்கள் தங்களை அடையாளம் காட்ட பாபா முத்திரையைத்தான் காட்டுகிறார்கள். மூன்று வயது குழந்தையும்கூட ரஜினி என்றால் பாபா முத்திரைதான் காட்டுகிறது.

அந்தப் படம் வசூல் ரீதியாக வெற்றிப் படமே என இன்றைக்கு தியேட்டர் உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் கூறி வருகின்றனர்.

ஆனால் தனது திரையுலக அனுபவப் புத்தகத்திலோ அந்த பாபாவைப் பற்றி பேசவே அதன் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தயக்கம் காட்டியுள்ளதை, ரசிகர்கள் கவனிக்கத் தவறவில்லை.

ரஜினி ரசிகர்களை மட்டுமே குறிவைத்து வெளியாகியுள்ள இந்தப் புத்தகத்தில் இந்தக் குறைபாடு வரலாமா?

 

Post a Comment