சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதி, முக அழகிரி, முக ஸ்டாலின் உள்பட தமிழக தலைவர்கள் இன்று வாழ்த்து தெரிவித்தனர்.
இன்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் அபூர்வ பிறந்த தினம் 12.12.12.
இந்த நாளில் அவருக்கு உலகம் முழுவதிலுமிருந்து தலைவர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள், வெளிநாடு வாழ் இந்திய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
காலையிலேயே தமிழக முதல்வர் ஜெயலலிதா தன் வாழ்த்துகளை ரஜினிக்கு தெரிவித்தார்.
கருணாநிதி
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இதுகுறித்து கருணாநிதி கூறுகையில், "சூப்பர்ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களின் 63 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை எனது வாழ்த்தினை தொலைப்பேசியில் தெரிவித்துக்கொண்டேன்," என்றார்.
முக அழகிரி
மத்திய அமைச்சர் முக அழகிரி ரஜினிக்கு போனில் வாழ்த்து தெரிவித்தார். சரித்திரப் புகழ்பெற்ற நாளில் பிறந்த நாள் கொண்டாடும் நண்பர் ரஜினிக்கு வாழ்த்துகள் என்று அவர் கூறியுள்ளார்.
முக ஸ்டாலின்
திமுக பொருளாளரும் முன்னாள் துணை முதல்வருமான முக ஸ்டாலின் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரும் மத்திய நிதியமைச்சருமான ப சிதம்பரம் ரஜினிக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், திருநாவுக்கரசர், குமரி அனந்தன் ஆகியோரும் ரஜினியை வாழ்த்தினர்.
மதிமுக பொதுச் செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் ஆகியோரும் ரஜினிக்கு இன்று காலை வாழ்த்து தெரிவித்தனர்.
பாஜக தலைவர்கள் எல்கே அத்வானி, நிதின் கட்கரி, இல கணேசன், பொன் ராதாகிருஷ்ணன் உள்பட பலரும் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
Post a Comment