விருதுகளுக்காக நான் சினிமா எடுப்பதில்லை. ஆனால் வந்தால் மறுப்பதில்லை, என்று இயக்குநர் பாலா தெரிவித்துள்ளார்.
பாலாவின் இயக்கத்தில் அடுத்து வரும் படம் பரதேசி. முரளியின் மகன் அதர்வாதான் ஹீரோ.
படம் விரைவில் வெளியாக இருப்பதால், இதுவரை தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்த பாலா, முக்கிய பத்திரிகைகளைத் தொடர்பு கொண்டு பேட்டிகள் அளிக்க ஆரம்பித்துள்ளார்.
அப்படி அளித்த ஒரு பேட்டியிலிருந்து...
அதர்வாவை இந்தப் படத்தில் நடிக்க வைக்க நான் கடமைப்பட்டவன். காரணம், நான் பள்ளியில் படித்தபோது எங்கள் ஊரில் முரளி நடித்த அதர்மம் படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அதைப் பார்க்க போனேன்.
பின்னாளில் சென்னை வந்து உதவி இயக்குனராக பணியாற்றியபோது முரளியை சந்தித்தேன். அவர் என்னை 15 தயாரிப்பாளர்களிடம் அழைத்துப்போய் படம் இயக்குவதற்கு சிபாரிசு செய்தார். அந்த நன்றிக்கடன் அவர் மகன் அதர்வாவை வைத்து இந்தப் படத்தை என்னை இயக்க வைத்துள்ளது.
எனது படங்களில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்காது என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதை இந்த படம் மாற்றும்.
பரதேசியில் வன்முறை கிடையாது. இது வேறு ஒரு உலகம். நான் வளர்ந்த பின்னணி சமூகத்தில் இருண்ட பக்கங்களை மட்டுமே என்னை படமாக்க வைக்கிறதோ என்னமோ...
எனக்கு விருதுகள் இலக்கல்ல.. அதற்காக படம் எடுப்பதில்லை. ஆனால் விருது கிடைத்தால் சந்தோஷப்படுவேன்.
என்னை பலரும் சண்டைக்காரனாக, முரடனாகப் பார்க்கிறார்கள். அதில் எனக்கு கவலை எதுவுமில்லை. ஆனால் நிஜத்தில் நான் மிகவும் சாது. யாரிடமும் கோபப்படமாட்டேன்," என்றார்.
Post a Comment