ரஜினியுடன் இணைந்து நடிப்பது ரொம்ப காஸ்ட்லியான விஷயம். அப்படி ஒரு படத்தைத் தயாரிக்க பணம் போதாது. எக்கச்சக்கமாக பணமிருந்தால் மட்டுமே அந்தப் படத்தைத் தயாரிக்க முடியும், என்கிறார் கமல்ஹாஸன்.
கமல் - ரஜினி என்றிருந்த காலத்தில் இருவரும் இணைந்து நடித்தார்கள். அது எப்போது ரஜினி - கமல் என மாறியதோ, அன்றிலிருந்து இருவரும் தனித் தனி பாதைகளில் பயணிக்க ஆரம்பித்துவிட்டனர்.
ரஜினியே சொன்னதுபோல, இதுதான் தனக்கான பாதை என ரஜினி தீர்மானித்த பிறகு, தனக்கென தனி பாணியை பின்பற்ற ஆரம்பித்தார். அதில் மிகப்பெரிய வெற்றிகளை சாதித்திருக்கிறார்.
இப்போது அடிக்கடி பேசப்படுவது, மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிப்பது சாத்தியமா? என்பதுதான். இருவரும் கடைசியாக சேர்ந்து நடித்த படம் தமிழில் அலாவுதீனும் அற்புத விளக்கும் (1979). இந்தியில் கிராப்தார் (1985). இடையில் தில்லுமுல்லு, அக்னிசாட்சி போன்ற படங்களில் இருவரும் ஒரு காட்சியில் தோன்றுவார்கள்.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் சேர்ந்து நடிப்பது சாத்தியமா? என்ற கேள்வியை ரசிகர்கள் மட்டுமல்ல, திரையுலகினரும்கூட ஆவலுடன் கேட்கிறார்கள்.
கமலிடம் இதைக் கேட்டபோது, "ரஜினியுடன் பணியாற்றுவது என்ற கேள்வியே ரொம்ப ரொம்ப காஸ்ட்லியானது. ஒருவேளை நாங்கள் சேர்ந்து நடித்தால், அதைத் தயாரிக்க தேவையான பணத்துக்கு எங்கே போவீர்கள்? அவ்வளவு பணம் உள்ள தயாரிப்பாளர் யார்? ஏராளமான பணம் இருந்தால்... செலவழிக்க தாயாராக இருந்தால் ஒருவேளை நாங்கள் சேர்ந்து நடிப்பது சாத்தியமாகலாம்," என்றார்.
Post a Comment