சென்னை: கமல்ஹாஸனின் டிடிஎச் வெளியீட்டு முயற்சிக்கு தமிழ் சினிமாவின் பெரும்பாலான அமைப்புகள் முழு ஆதரவை அளித்துள்ளன. திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மட்டுமே முழுமையாக எதிர்க்கின்றனர்.
விஸ்வரூபத்தை தியேட்டர்களில் வெளியிடுவதற்கு 1 நாள் முன்னதாக டிடிஎச்சில் நாடு முழுவதும் மூன்று மொழிகளில் கமல்ஹாஸன் வெளியிடுகிறார். இதில் முன்னணி டிடிஎச் நிறுவனங்கள் 5 அவருடன் இணைந்துள்ளன.
ஆனால் திரையரங்க உரிமையாளர் சங்கமும், விநியோகஸ்தர்கள் சங்கமும் கமல் ஹாஸனுக்கு இனி எந்த ஒத்துழைப்பும் தரமுடியாது, அவர் படத்தை தியேட்டர்களில் வெளியிடவும் மாட்டோம் என அறிவித்துவிட்டனர்.
இந்த நிலையில் கமல் முயற்சிக்கு தமிழ் சினிமாவின் முக்கிய அமைப்புகள் ஆதரவு அளித்துள்ளன.
தென்னிந்திய பிலிம்சேம்பர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், அமீர் தலைமையிலான பெப்சி, பாரதிராஜா தலைமையில் இயங்கும் இயக்குநர்கள் சங்கம், சரத்குமார் தலைமை வகிக்கும் நடிகர் சங்கம் ஆகியவை அவருக்கு முழு ஆதரவு அளித்துள்ளன.
அதுமட்டுமில்லாமல், இன்று மாலை 7.30 மணிக்கு சென்னை ஹயாத் ஓட்டலில் இந்த அமைப்பின் தலைவர்கள் அனைவரும் கமலுடன் இணைந்து கூட்டாக நிருபர்களைச் சந்திக்கின்றனர்.
ஏற்கெனவே அரசின் ஆதரவையும் கமல்ஹாஸன் பெற்றுள்ளதால், தன் முயற்சியில் தொடர்ந்து உறுதியாக இருந்து வருகிறார்.
Post a Comment