சினிமா... சமூகத்தின் பிரதிபலிப்பா? அல்லது சினிமாவின் பிரதிபலிப்பாக இன்றைய சமூகம் மாறியிருக்கிறதா என்ற கேள்விக்கு இன்றளவும் தெளிவான பதில் இல்லை. சமூக சீரழிவுக்கு சினிமாதான் காரணமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இதைப்பற்றி சன் டிவியின் கல்யாணமாலை நிகழ்ச்சியில் சுவையான பட்டிமன்றம் நடத்தினர்.
இந்த பட்டிமன்றத்தில் நடுவராக இசைஅமைப்பாளரும் இயக்குநருமான கங்கை அமரன் பங்கேற்றார். சினிமா சமூகத்தை சீரழிக்கிறது என்ற அணியில் பிரபல வழக்கறிஞர் சுமதி தன்னுடைய கருத்தை முன்வைத்தார்.
சமூகம் என்பது சினிமாவின் விதை நெல். அதை எப்படி நாங்கள் சமைத்து சாப்பிடுவோம். சமுதாயத்தை ஒருபோதும் சினிமா சீரழிக்காது என்றார் நடிகர் இளவரசு.
சமூகத்தில் இருந்துதான் சினிமாவிற்குத் தேவையான கருவை எடுத்துக் கொள்கிறோமே தவிர ஒருபோதும் சமுதாயத்தை சீரழிக்கிற மாதிரியான கருத்துக்களை சினிமா சொன்னது கிடையாது என்றார்.
கோவையில் ஏழு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லச் சொல்லி எந்த சினிமாவிலும் சொல்லவில்லை என்று கூறிய இளவரசு, பணம் கொடுத்து படம் பார்க்க வருபவர்களுக்காக சில காட்சிகளை சினிமாவில் புகுத்துவதில் தவறேதும் இல்லை என்றார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய வழக்கறிஞர் சுமதி, அலைபாயுதே திரைப்படம் வந்த பின்னர்தான் பெற்றோருக்குத் தெரியாமல் அதிக அளவில் காதல் திருமணங்கள் நடைபெறுவதாக கூறினார்.
ரிஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டு பெற்றோர் வீட்டில் வசிக்கும் பெண், கடைசியில் தன் கணவனைப் பற்றி தெரிந்து கொண்டு சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் கடைசியில் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடுவதாகவும் கூறினார் சுமதி.
என்னதான் சமூக சீரழிவிற்கு சினிமா காரணமில்லை என்று வாதிட்டாலும் சமூகத்தில் நடக்கும் குற்றச் செயல்களுக்கு பின்னணியில், ஏதேனும் ஒரு வகையில் சினிமா இருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதற்கு பதிலடி தரும் விதமாக வரும் வாரங்களில் பேச உள்ளார் தம்பி ராமையா.
Post a Comment