பெங்களூர்: பெங்களூரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான பல்லவி தியேட்டர் மூடப்பட்டு விட்டது. நேற்றோடு இந்த தியேட்டர் தனது திரைச் சேவையை நிறுத்திக் கொண்டது. இனி இந்த இடத்தில் பிரமாண்டமான மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்படவுள்ளது. கடைசியாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான நீதானே என் பொன்வசந்தம் படத்தோடு இந்த தியேட்டர் தனது சேவையை நிறுத்தியது.
36 வருடமாக பெங்களூர் திரைப்பட ரசிகர்களைக் கவர்ந்திழுத்து வந்த தியேட்டர்களில் ஒன்றுதான் பல்லவி தியேட்டர். இந்தத் தியேட்டரில் பெரும்பாலும் தமிழ்ப் படங்களே திரையிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
1976ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி இந்தத் தியேட்டர் திறக்கப்பட்டது. கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் தலைமையில் தியேட்டர் திறக்கப்பட்டது. இதுவரை இங்கு தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான 400க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை தமிழ்ப் படங்களே.
நல்ல ரசனையான தியேட்டராக பல்லவி தியேட்டர் இருந்து வந்தது. சிறந்த ஆடியோ வசதி, குளிர்சாதன வசதி என நல்லதொரு தியேட்டராக இருந்து வந்தது பல்லவி.
1200 பேர் அமரும் வகையிலான இந்தத் தியேட்டரில் தமிழ்ப் படங்களே அதிகம் போடப்படுவது பலமுறை கன்னட அமைப்புகளின் எதிர்ப்புகளையும், போராட்டங்களையும் சந்தித்துள்ளது. பலமுறை இந்தத் தியேட்டர் தாக்குதலுக்கும் உள்ளாகியது. இருந்தாலும் தொடர்ந்து இங்கு தமிழ்ப் படங்களையே அதிகம் திரையிட்டு வந்தனர் என்பது முக்கியமானது.
தற்போது இந்தத் தியேட்டரை இடித்து விட்டு அங்கு பிரமாண்டமான மருத்துவமனை ஒன்று இதே பெயரில் உருவாகவுள்ளதாம்.
Post a Comment